உள்ளூர் செய்திகள்
வத்திராயிருப்பில் பஸ்கள் கிடைக்காததால் மாணவர்கள் தவித்தனர்.

குறைந்த அளவில் பஸ்கள் இயக்கம்-பொதுமக்கள் அவதி

Published On 2022-03-28 16:31 IST   |   Update On 2022-03-28 16:31:00 IST
விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் குறைந்த அளவே பஸ்கள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள்-மாணவ, மாணவிகள் அவதியடைந்தனர்.
விருதுநகர்

விருதுநகரிலிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நாள்தோறும் 450 அரசு பஸ்கள் இயக் கப்பட்டு வருவது வழக்கம்.  இன்று வேலைநிறுத்தம் காரணமாக 90சதவீத பஸ்கள் இயக்கப்படவில்லை.

விருதுநகர் அரசு பணிமனையில் இருந்து இன்று காலை 3 அரசுபஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது. பெரும்பாலான அரசு பஸ்டிரைவர்கள், கண்டக்டர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் பஸ்களை இயக்கு வதில் சிக்கல் ஏற்பட்டது. 

வேலைநிறுத்தம் காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து பணிமனைகளில் 400க்கும் மேற்பட்ட பஸ்கள் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

விருதுநகர் பழைய மற்றும் புதிய பஸ்நிலையங்களில் இருந்து பஸ்கள் இயங்காததால் வெளியூர் மற்றும் பல்வேறு இடங்களுக்கு செல்லும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள்  அவதியடைந்தனர்.

வேலை நிறுத்தம் காரணமாக ஷேர்ஆட்டோக்கள் முழுமையாக இயக்கப்பட்டது. அரசு பஸ்கள் இல்லாததால் பொதுமக்கள் ஷேர்ஆட்டோவை நாடினர். அதிலும் அளவுக்கு அதிகமாக பொதுமக்கள் பயணம் செய்வதை காண முடிந்தது. 

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சில ஷேர்ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது.சாத்தூர், சிவகாசி வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, ஏழாயிரம் பண்ணை, அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி. 

காரியாபட்டி, பந்தல்குடி, மல்லாங்கிணறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அரசு பஸ்கள் முழுமையாக இயக்கப்படவில்லை. இதனால் அந்தப்பகுதிகளில் பொதுமக்கள் அவதி அடைந்தனர். அதிக பயணகட்டணம் கொடுத்து அவர் கள் ஆட்டோக்களில் பயணம் செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் வத்திராயிருப்பு தாலுகாவில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனைகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களில் இலவசமாக பயணம் செய்யும் பள்ளி மாணவ-மாணவிகள் பஸ்கள் கிடைக்காமல் தவித்தனர். 

குறிப்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட வத்திராயிருப்பு தாலுகாவில் இருந்து ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ& மாணவிகள் நாள்தோறும் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வருவார்கள். 

இன்று வேலை நிறுத்தம் காரணமாக அவர்களால் பள்ளி, கல்லூரி செல்ல முடியாமல் பஸ்நிலையத் தத்திலேயே காத்திருந்தனர். இந்தப்பகுதியில் இருந்து பணிக்கு செல்லும் பயணிகளும், பொதுமக்களும் பஸ்கள் இயங்காததால் பணிக்கு செல்ல முடியாமல் தனியார் பஸ்கள் வரும் வரை காத்திருந்தனர். 

ராஜபாளையத்தில் மொத்தமுள்ள 85 அரசு பஸ்களில் 80 பஸ்கள் இயங்க வில்லை. பணியாளர்கள் வராத காரணத்தினால் பணிமனையில் பஸ்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ராஜபாளையம் புதிய பஸ் நிலையத்தில் எந்த பஸ்களும் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது. 

பழைய பஸ்நிலையத்தில் தனியார் பஸ்கள் மட்டும் இயங்கியதால் ஓரளவு பயணிகள் ஏறி சென்றனர். பெரும்பாலான பஸ்கள் வராததால் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் கூட்டம் அதிக மாக காணப்பட்டது. ராஜ பாளையத்தில் சுறுசுறுப்பாக இயங்கும் அம்பலபுளி பஜார், நகைக்கடை பஜார் போன்றவை மூடப் பட்டிருந்தன. பள்ளிகள், கல்லூரிகள், பஞ்சாலைகள், நூற்பாலைகள் வழக்கம்போல் இயங்கின.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகம் மூலம் நகரப்பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு 316 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் இன்று 200 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. மற்ற பஸ்கள் ஓடவில்லை.  

இதனால் பணிக்கு செல்பவர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பஸ் நிலையங்களில் நீண்டநேரம் காத்திருந்தனர். காலை நேரத்தில் குறைந்த பஸ்கள் இயக்கப்பட்டாலும், நேரம் செல்ல செல்ல வழக்கம்போல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு போக்குவரத்துக்கழக மண்டல மேலாளர் தெரிவித்தார். 

சிவகங்கை மாவட்டத்திலும் இன்று குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டன. 50சதவீதத்திற்கும் குறைவான பஸ்களே ஓடின. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். பல்வேறு பகுதிகளில் உள்ள பஸ் நிலையங்களில் பொதுமக்கள் அதிகளவில் காத்திருப்பதை காணமுடிந்தது.

Similar News