உள்ளூர் செய்திகள்
கோவில் திருவிழாவில் தீ மிதித்த பக்தர்கள்
ராஜபாளையம் அருகே சேத்தூர் கோவில் திருவிழாவில் பக்தர்கள் தீ மிதித்தனர்.
ராஜபாளையம்,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூரில் தேவர் பொது பண்டுக்கு பாத்தியப்பட்ட ஏக்கலா தேவி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி பொங்கலை முன்னிட்டு 10 நாட்கள் திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு 8 நாட்கள் திருவிழா நடைபெற்றது.
9வது நாளான நேற்று பூக்குழி திருவிழா நடத்தப்பட்டது. காலையிலேயே குண்டத்தில் தீ வளர்க்கப்பட்டு பெண்கள் எண்ணெய் ஊற்றி வழிபாடு செய்தனர். மாலையில் ஏக்கலாதேவி அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா கொண்டுவரப்பட்டது.
சப்பரத்தின் பின்புறம் தீ மிதிக்கும் நூற்றுக்கணக்கான பக்தர்கள், முளைப்பாரி, ஆயிரம் கண் பானை, பால் குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். ஊர்வல முடிவில் கோவில் முன்பு வளர்க்கப்பட்ட குண்டத்தில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். 500க்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள் கைக்குழந்தை களுடன் தீ மிதித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை சேத்தூர் தேவர் பொது பண்டு தலைவர் செல்லம் சிங்கம்புலி, செயலாளர் சுந்தரதாஸ், பொருளாளர் முருகானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை சேத்தூர் போலீசார் செய்திருந்தனர்.