உள்ளூர் செய்திகள்
மெட்ரோ ரெயில்

மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயணிகள் வசதிக்காக கடைகள்-உணவு விடுதிகள்

Published On 2022-03-27 06:28 GMT   |   Update On 2022-03-27 06:28 GMT
ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து இப்போது தினசரி 2 லட்சம் பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்கின்றனர்.
சென்னை:

மெட்ரோ ரெயில் நிறுவனம் பயணிகளை கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

இதற்காக பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வருகிறது. மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஆரம்பத்தில் ஏ.டி.எம். வசதிகள் இல்லாமல் இருந்தது. தற்போது 30-க்கும் மேற்பட்ட ஸ்டே‌ஷன்களில் ஏ.டி.எம். மிஷின்கள் நிறுவப்பட்டுள்ளன.

தற்போது மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயணிகள் வசதிக்காக கடைகள், உணவு கூடங்கள் அமைக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

விமான நிலையங்களில் பொதுமக்கள் ‘ஷாப்பிங்’ செய்வதுபோல் மெட்ரோ ரெயில் நிலையங்களில் காத்திருக்கும் பயணிகள் வசதிக்காக கடைகள், ஓட்டல்கள் அமைக்கவும் அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா தொற்றுக்கு முன்பு 2020 ஆண்டு தினமும் 1 லட்சம் பயணிகள் மெட்ரோ ரெயிலை பயன்படுத்தி வந்தனர். அதன் பிறகு கொரோனா ஊரடங்கால் மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து இப்போது தினசரி 2 லட்சம் பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்கின்றனர்.

சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து தான் அதிகம்பேர் பயணம் செய்கின்றனர். இதற்கு அடுத்தபடியாக திருமங்கலம், கிண்டி, ஐகோர்ட்டு மற்றும் விமான நிலையங்களில் கூட்டம் காணப்படுகிறது.

இன்னும் சில மாதங்களில் பயணிகளின் எண்ணிக்கை 3 லட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் 30-க்கும் மேற்பட்ட மெட்ரோ ரெயில் நிலையங்களில் கடைகள் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. ஏற்கனவே கோயம்பேடு, நந்தனம், ஆலந்தூர் போன்ற ஸ்டே‌ஷன்களில் சில கடைகள் இருந்தாலும் சென்ட்ரல், எழும்பூர், திருமங்கலம் உள்பட பெரிய ஸ்டே‌ஷன்களில் கடைகள் திறக்கப்படவில்லை.

எனவே இங்கு பெட்டிக்கடைகள், டீ கடைகள், ஓட்டல்கள், அழகு சாதனப்பொட்கள், தின்பண்டங்கள், துணிக்கடைகள், செருப்பு கடைகள் உள்ளிட்ட பல்வேறு ரக கடைகளை அமைக்க அனுமதி கொடுக்க உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்காக டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும் விரைவில் வாடகைக்கு கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.



Tags:    

Similar News