search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போராட்டம்
    X
    போராட்டம்

    நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம்- சென்னையில் நாளை 11 இடங்களில் மறியல்

    தமிழகம் முழுவதும் நாளை அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்சங்கத்தினர் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்துகிறார்கள். மாநிலம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மறியல் நடைபெற உள்ளது.
    சென்னை:

    மத்தியில் உள்ள பா.ஜனதா அரசை கண்டித்து நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் 2 நாட்கள் பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

    இதன்படி நாளையும், நாளை மறுநாளும் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் பொது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களும் பங்கேற்கின்றன.

    இதனால் வங்கி, எல்.ஐ.சி. உள்ளிட்ட பணிகளும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தத்துக்கு மாநில தொழிற்சங்கங்களும் முழு ஆதரவை தெரிவித்துள்ளன.

    தமிழகத்தில் தி.மு.க. தொழிற்சங்கமான எல்.பி.எப். மற்றும் கம்யூனிஸ்டு தொழிற்சங்கங்களான சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட 12 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

    இதன்படி நாளை நடைபெறும் வேலைநிறுத்த போராட்டத்தில் இந்த தொழிற்சங்கங்களை சேர்ந்த பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் பஸ் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுமோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    ஆனால் நாளை வழக்கம் போல பஸ்கள் ஓடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெயில் போக்குவரத்தும் தடையின்றி நடைபெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ள தொழிற்சங்க நிர்வாகிகள் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு நாளை மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன.

    சென்னையில் நாளை 11 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.
    மத்திய அரசு
    அலுவலகங்கள் முன்பு தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

    தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை பகுதிகளை தனித்தனியாக ஒன்றிணைத்து தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்துகிறார்கள். வட சென்னை பகுதியில் 9 இடங்களை போராட்டத்துக்காக தேர்வு செய்துள்ளனர்.

    வடசென்னையில் சட்டமன்ற தொகுதி வாரியாக தபால் நிலையங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது. மத்திய சென்னைக்குட்பட்ட பகுதியில் ஒரு இடத்திலும், தென்சென்னை பகுதிகளை ஒன்றிணைத்து ஒரு இடத்திலும் போராட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இதன்படி மத்திய சென்னை தொழிற்சங்க நிர்வாகிகள் சென்னை அண்ணா சாலை தலைமை தபால் நிலையம் முன்பு திரண்டு போராட்டம் நடத்துகிறார்கள். இந்த போராட்டத்தில் தொழிற்சங்கங்களை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

    தென்சென்னை பகுதியில் கிண்டி பஸ் நிலையம் அருகே உள்ள தபால் நிலையம் முன்பு போராட்டம் நடத்தப்படுகிறது. செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் நாளை தலா 5 இடங்களில் போராட்டம் நடைபெறுகிறது.

    இதேபோன்று தமிழகம் முழுவதும் நாளை அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்சங்கத்தினர் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்துகிறார்கள். மாநிலம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மறியல் நடைபெற உள்ளது.

    பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டங்களை தொடர்ந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் சுமார் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் போலீசை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். நாடு முழுவதும் நடைபெறும் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் 25 கோடிக்கும் அதிகமானோர் பங்கேற்க இருப்பதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

    விலைவாசி உயர்வை மத்திய அரசு கட்டுக்குள் கொண்டுவர வேண்டும், மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.

    தமிழகத்தை பொறுத்தவரையில் பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க. தொழிற்சங்கத்தினர் இந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    அனைத்து மாநிலங்களிலும் தொழிற்சங்கங்கள் இணைந்து முன்னெடுத்துள்ள இந்த போராட்டம் காரணமாக பல்வேறு அரசு பணிகளில் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது.



    இதையும் படியுங்கள்...மு.க.ஸ்டாலின் இன்று மாலை அபுதாபி செல்கிறார்- நாளை மாலை பிரமாண்ட பாராட்டு விழா
    Next Story
    ×