உள்ளூர் செய்திகள்
காலபைரவருக்கு மகா தீபாராதனை.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கால பைரவர் சிறப்பு வழிபாடு

Published On 2022-03-26 08:12 GMT   |   Update On 2022-03-26 08:12 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கால பைரவர் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பிரம்ம தீர்த்தக் குளம் அருகில் கால பைரவர் சன்னதி அமைந்துள்ளது. இங்கு தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

பவுர்ணமியை அடுத்த 8&வது நாள் வரும் அஷ்டமி திதியில் மகா கால பைரவரை வணங்குவது மிகவும் விசேஷமானது என்று கருதப்படுகிறது.

நேற்று தேய்பிறை அஷ்டமி தினம் என்பதால் இரவு கால பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதையொட்டி காலபைரவருக்கு பச்சரிசிமாவு, அபிஷேக பொடி, மஞ்சள், தயிர், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் முந்திரி மற்றும் வடை மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

 ஸ்ரீ மகா கால பைரவருக்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பஞ்ச கிளை என்று அழைக்கப்படுகின்ற மகா தீபாராதனை செய்தனர்.

அப்போது "அண்ணாமலையாருக்கு அரோகரா" என்ற கோஷம் எழுப்பி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் துர்சக்திகள் விலகவும், எதிரிகளிடம் இருந்து வரும் ஆபத்துகளிலிருந்து காப்பாற்றவும் தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு பூசணிக்காய் தீபம் ஏற்றுவதால் கடன் மற்றும் பிரச்சினைகள் நீங்கும் என்பதால் ஏராளமான பக்தர்கள் ஒரு பூசணிக்காயை இரண்டாக பிளந்து ஒரு பாதியில் மஞ்சளும், ஒரு பாதியில் குங்குமமும் வைத்து இலுப்பு எண்ணெய் ஊற்றி சிகப்பு திரி போட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

இதைத்தொடர்ந்து காலபைரவர் முன்பு வைத்த சிகப்பு கயிறு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
Tags:    

Similar News