உள்ளூர் செய்திகள்
நகை பறிப்பு

ஆசாரிபள்ளத்தில் இன்று அதிகாலை ஆலயத்திற்கு சென்ற பெண்ணை தாக்கி 6½ பவுன் நகை பறிப்பு

Published On 2022-03-16 05:47 GMT   |   Update On 2022-03-16 05:47 GMT
ஆசாரிபள்ளத்தில் இன்று அதிகாலை ஆலயத்திற்கு சென்ற பெண்ணை தாக்கி 6½ பவுன் நகை பறிப்பு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் கைவரிசை

ராஜாக்கமங்கலம்:

நாகர்கோவில் கீழ ஆசாரிபள்ளம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் மரிய செல்வி (வயது 72).

இவர், தினமும் அந்த பகுதியில் உள்ள ஆலயத்திற்கு காலையில் செல்வது வழக்கம். இன்று காலையில் வழக்கம்போல் மரியசெல்வி வீட்டில் இருந்து ஆலயத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் மரியசெல்வியின் கழுத்தில் கிடந்த 6½ பவுன் செயினை பறித்தனர்.

அப்போது மரியசெல்வி செயினை பிடித்துக் கொண்டார். இதையடுத்து கொள்ளையர்கள் அவரை கீழே தள்ளி தாக்கினர். உடனே மரியசெல்வி கூச்சலிட்டார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். அதற்குள் மர்மநபர்கள் 6½ பவுன் செயினை பறித்து விட்டு தப்பி யோடி விட்டனர்.

இது குறித்து மரியசெல்வி, ஆசாரிபள்ளம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மரியசெல்வியிடம் கொள்ளையர்கள் குறித்த அடையாளங்களை கேட்டறிந்த போலீசார் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டனர். ஆனால் கொள்ளையர்கள் யாரும் சிக்கவில்லை.

இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவின் காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். மரியசெல்வி, தினமும் ஆலயத்திற்கு செல்வதை நோட்டமிட்டே கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். எனவே இந்த கொள்ளை சம்பவத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த நபர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இது தொடர்பாக அந்த பகுதியைச் சேர்ந்த சிலரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Tags:    

Similar News