உள்ளூர் செய்திகள்
வடகிழக்கு கலைஞர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சி

தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில் வடக்கிழக்கு மாநில கலை விழா

Published On 2022-03-13 10:32 GMT   |   Update On 2022-03-13 10:32 GMT
தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில் வடக்கிழக்கு மாநில கலை விழா தொடங்கியது.
தஞ்சாவூர்:

தஞ்சை தென்னகப்பண்பாட்டு மையத்தில் மத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகம் சார்பில் ‘ஆக்டேவ்’ என்கிற வடகிழக்கு மாநில கலைவிழா&-2022 தொடக்க விழா நேற்று மாலை நடந்தது. 

தெற்கு மத்திய பண்பாட்டு மைய துணை இயக்குனர் கவுரி மராட்டே வரவேற்று பேசினார். வடகிழக்கு மாநில கலைவிழாவை டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ. முரசு கொட்டி தொடங்கி வைத்தார்.

இதில் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, தென்னகப்பண்பாட்டு மைய நிர்வாக ஆலோசகர் சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் உமாசங்கர் நன்றி கூறினார்.

பின்னர் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, மணிப்பூர், அருணாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த கலைஞர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதேபோல் கைவினைப் பொருட்காட்சி, உணவு திருவிழாவும் தொடங்கியது. 

தஞ்சை பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் குடும்பத்தினருடன் வந்து கலைநிகழ்ச்சியை கண்டுகளித்தனர். மேலும் வடகிழக்கு மாநிலங்களின் இயற்கை உணவுகளையும் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.


இன்று 2-வது நாளாக கைவினை பொருட்காட்சி, உணவு திருவிழா காலை 11 மணிக்கு தொடங்கியது. இன்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான குடும்பத்தினர் தங்களது பிள்ளைகளுடன் வந்து கைவினை பொருட்காட்சியை பார்த்து ரசித்தனர். 

இதேப்போல் பல்வேறு வகையான உணவு வகைகளையும் பார்த்தனர். மாலை 6.30 மணியளவில் வடகிழக்கு மாநில கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த கலைவிழா வருகிற 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது. 
Tags:    

Similar News