உள்ளூர் செய்திகள்
நீலகிரியில் கடைக்காரர்களுக்கு ரூ.19,800 அபராதம்
2.5 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறதா என்பது குறித்து வருவாய்த் துறை அலுவலர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள், உள்ளாட்சித் துறை அலுவலர்கள், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் வணிக நிறுவனங்கள், உணவு விடுதிகள் போன்றவற்றை ஆய்வு செய்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவோரிடம் இருந்து அவற்றை பறிமுதல் செய்து, அபராதமும் விதித்து வருகின்றனர்.
குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட பெட்போர்டு, மவுண்ட் சாலை பகுதிகளில் அமைந்துள்ள வணிக நிறுவனங்களில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் லிவிங்ஸ்டன் தலைமையிலான தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்கள் அடங்கிய குழுவினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின்போது 9 கடைகளில் இருந்து 7.5 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அந்த நிறுவனங்களிடம் இருந்து ரூ.15,000 அபராதமாக வசூலிக்கப்பட்டது. அதேபோல, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய உதவிப் பொறியாளர் நீலமேகம் தலைமையிலான அதிகாரிகள் ஊட்டி நகராட்சிக்குட்பட்ட கடைகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது 5 வணிக நிறுவனங்களிடம் இருந்து சுமார் 2.5 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்து ரூ. 4,800 அபராதமாக வசூலித்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும் பிளாஸ்டிக் பயன்படுத்தியவர்களிடம் இருந்து ரூ.19,800 அபராதமாக வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.