உள்ளூர் செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்ட மைனுத்தினை போலீசார் குண்டு கட்டாக தூக்கி சென்ற காட்சி.

குடியாத்தத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினரின் கணவர் பெரியார் சிலை முன்பு அமர்ந்து போராட்டம்

Published On 2022-03-12 15:34 IST   |   Update On 2022-03-12 15:34:00 IST
குடியாத்தத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினரின் கணவர் பெரியார் சிலை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள மேல்ஆலத்தூரை சேர்ந்தவர் மைனுத்தின் (வயது 37). இவர் குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஒன்றிய செயலாளராக உள்ளார். இவரது மனைவி ரேஷ்மா கூடநகரம் ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினராக உள்ளார்.

கூடநகரம் ஊராட்சி 8&வது வார்டு பகுதியில் குடிநீர் பிரச்சினைக்காக மைனுத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு அளித்ததாகவும் அது சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

இதுகுறித்து போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்து விசாரணை நடைபெற்று உள்ளது.

மைனுத்தின் இன்று காலை குடியாத்தம் அர்ஜுன முதலி தெருவில் உள்ள பெரியார் சிலை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.  இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குடிநீர் பிரச்சினைக்காக மனு அளித்து போராடும் தன்னை மிரட்டுவதாகவும் உரிய நடவடிக்கை இல்லை எனக் கூறினார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் யுவராஜ், அரசியல் கட்சி பிரமுகர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். 

இதனையடுத்து போலீசார் மைனுத்தினை குண்டுக்கட்டாக போலீஸ் வாகனத்தில் ஏற்றி குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். அப்போதும் அவர் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி வற்புறுத்தி வந்தார். 

இதனையடுத்து குடியாத்தம் நகராட்சி முன்னாள் நகரமன்ற உறுப்பினர் இஸ்மாயில், வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, இன்ஸ்பெக்டர் லட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர் குமரன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Similar News