மஞ்சூர் அருகே டீக்கடை கதவை உடைத்து பொருட்களை சூறையாடிய கரடி
மஞ்சூர்:
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
பகல் நேரங்களில் சுற்றுபுற பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் நடமாடும் கரடிகள் இரவு வேளைகளில் உணவு தேடி குடியிருப்புகளில் உலா வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் நேற்று குந்தா தாலுகா அலுவலகம் அருகே உள்ள மாணிக்கம் என்பவரது டீக்கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்த கரடி ஒன்று கடைக்குள் வைக்கப்பட்டிருந்த சமையல் எண்ணை மற்றும் உணவு பொருட்களை சூறையாடியது.
மேலும் அடுப்பையும் உடைத்து தள்ளிவிட்டு சென்றுள்ளது. இந்நிலையில் வழக்கம் போல் டீ கடையை திறக்க சென்ற மாணிக்கம் கடையின் கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறியிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதை தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து குந்தா ரேஞ்சர் சீனிவாசன் மேற்பார்வையில் வனவர் ரவிக்குமார் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று பார்வையிட்டனர். இதை தொடர்ந்து அப்பகுதியில் கரடியின் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இச்சம்பவம் கொட்டரகண்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.