உள்ளூர் செய்திகள்
நீலகிரியில் கூட்டுறவு விற்பனை சங்கத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
உரம் வழங்காததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன் வாங்கும் விவசாயிகளுக்கு மொத்த கடன் தொகையில் 25 சதவீதம் உரத்துக்காக ஒதுக்கப்பட்டு அந்த உரத்தை உதகையில் உள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் பெற்றுக் கொள்ள அனுமதி சீட்டு கொடுக்கப்படுவது வாடிக்கையாகும். இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் கடன் பெற்ற விவசாயிகளுக்கு நவம்பர் மாதத்தில் உரத்தை பெற்று கொள்ளும் வகையில் அனுமதி சீட்டு கொடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், கொரோனா தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் விவசாயிகளுக்கு உரம் விநியோகிக்கப்படவில்லை. அதன் பின்னர் உள்ளாட்சித் தேர்தலைக் காரணம் காட்டியும் உர விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கூட்டுறவு அமைப்புகளில் விவசாயக் கடன் பெற்ற விவசாயிகள் கடந்த வாரத்தில் கூட்டுறவுச் சங்க அதிகாரிகளைச் சந்தித்து நேரில் முறையிட்டபோது அவர்களுக்கு நேற்று உர விநியோகம் செய்யப்படும் எனக் கூறி அதற்காக புதிதாக அனுமதிக் கடிதத்தையும் கொடுத்தனர்.
இதையடுத்து நேற்று காலை நூற்றுக்கணக்கான விவசாயிகள் சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்க கிடங்குக்கு வந்தனர். ஆனால் அங்கு வந்த அலுவலர்கள், தங்களுக்கு வந்து சேர வேண்டிய உரம் இன்னும் வரவில்லை எனவும், உர விநியோகத்துக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தனர். இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள் அந்த அலுவலகத்தை முற்றுகையிட்டதோடு, அப்பகுதியில் திடீர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.