உள்ளூர் செய்திகள்
தோடர் இன பெண்களுக்கு மகளிர் சக்தி விருது
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
ஊட்டி:
இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், 2020-ம் ஆண்டுக்கான மகளிர் சக்தி விருது நீலகிரி மாவட்ட கட்டபெட்டு மந்து பகுதியைச் சேர்ந்த தோடர் இன பெண்கள் ஜெயாமுத்து, தேஜம்மாள் ஆகியோருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
தொழில்முனைவோர், விவசாயம், கல்வி, அறிவியல், தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.இதில், நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கட்டபெட்டுவில் வசிக்கும் ஜெயாமுத்து, தேஜம்மாள் ஆகிய பழங்குடி பெண்கள் இவர்களின் மூதாதையர்களின் பழக்கம், பண்பாடுகளை இன்றளவும் நினைவூட்டும் வகையில் கைவினைப் பொருள்களைச் சந்தைப்படுத்தியதற்கும், பாரம்பரிய மிக்க சிறப்புகளை இன்றளவும் பாதுகாத்து உலகளாவிய சந்தையில் விற்பனை மேற்கொண்டு அதற்காக புவிசார் குறியீடு பெற்றதற்காகவும் பாராட்டு விழா நடைபெற்றது.
நீலகிரி மாவட்டத்துக்கு வந்த இவர்களை கவுரவிக்கும் வகையில், நீலகிரி ஆதிவாசி நலச்சங்கம் செயலாளர் ஆல்வாஸ், பண்டைய பழங்குடியின பேரவைச் செயலாளர் புஷ்பகுமார், நாவா கண்காணிப்பாளர் மனோகரன் சார்பில் விக்டோரியா ஆம்ஸ்ட்ராங் நினைவு தொடக்கப் பள்ளி மூலம் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.