உள்ளூர் செய்திகள்
சிமெண்ட் கலவை எந்திரம் விழுந்து ஆட்டோ நொறுங்கி கிடந்த காட்சி.

லாரியில் இருந்த கலவை எந்திரம் கழன்று ஆட்டோ மீது விழுந்தது 2 பேர் காயம்

Published On 2022-03-11 15:25 IST   |   Update On 2022-03-11 15:25:00 IST
வேலூர் சர்வீஸ் சாலையில் லாரியில் இருந்த கலவை எந்திரம் கழன்று ஆட்டோ மீது விழுந்ததில் 2 பேர் காயமடைந்தனர்.
வேலூர்:

வேலூர் சத்துவாச்சாரியில் இருந்து வேலூர் நோக்கி சிமெண்ட் ஜல்லி கலவை எந்திரம் பொருத்தப்பட்ட லாரி ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் வந்தது. 

சென்னை சில்க்ஸ் ஜவுளி கடை அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சர்வீஸ் சாலையில் லாரி வேகமாக இறங்கியது. 

அப்போது லாரியில் பொருத்தப்பட்டிருந்த ஜல்லி கலவை எந்திரம் தனியாக கழன்று சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவின் மீது  விழுந்தது‌.

இந்த விபத்தில் ஆட்டோ முழுவதும் நொறுங்கியது. ஆட்டோவில் இருந்த பயணி ஒருவரும், ஆட்டோ டிரைவரும் காயமடைந்தனர். வேலூர் வடக்கு போலீசார் அவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்குசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தால் சத்துவாச்சாரியில் இருந்து வேலூர் புதிய பஸ் நிலையம் செல்லும் சர்வீஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. லாரியில் இருந்து கழன்று விழுந்த எந்திரம் மற்றும் ஆட்டோவை அங்கிருந்து அப்புறப்படுத்திய பிறகு போக்குவரத்து சீரானது.

சத்துவாச்சாரி பகுதியில் சர்வீஸ் சாலையில் இருபுறமும் வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர். எதிர்த்திசையில் அதிக வாகனங்கள் வருவதால் விபத்துகள் ஏற்படுகிறது.

அதுபோன்ற விபத்துக்களையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Similar News