உள்ளூர் செய்திகள்
வேலூரில் பைக்குகளை திருடி செல்லும் கும்பல்
வேலூரில் இரவில் வீடுகள் முன்பு நிறுத்தப்பட்டுள்ள பைக்குகள் திருடு போவதால் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வேலூர்:
வேலூர் சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் வீடுகள் முன்பு நிறுத்தப்பட்டுள்ள பைக்கை திருடுவது மற்றும் பெட்ரோல் திருடுவது அடிக்கடி அரங்கேறி வருகிறது.
வேலூர் சத்துவாச்சாரி, காட்பாடி கொணவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் பைக் திருட்டு அதிகளவில் நடக்கிறது. இரவு நேரங்களில் மர்ம கும்பல் நோட்டமிட்டு வீடு மற்றும் கடைகளின் முன்பு நிறுத்தி வைத்திருக்கும் பைக்குகளை லாவகமாக திருடி செல்கின்றனர்.
இந்தத் திருட்டில் சிறுவர்கள் மற்றும் வாலிபர்கள் ஈடுபடுகின்றனர். இதுமட்டுமின்றி வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை அடிப்பது, நடந்து செல்பவர்களிடம் வழிப்பறி செய்வது, மிரட்டி பணம் பறிப்பது போன்ற பல்வேறு குற்றச்செயல்களில் சிறுவர்கள் ஈடுபடுகின்றனர்.
இதனை தடுக்க போலீசார் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும். ஒவ்வொரு தெருவிலும் இரவில் ரோந்து சென்று கண்காணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.