உள்ளூர் செய்திகள்
ரேசன் கடைகளில் முறைகேடு நடந்தால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்
வேலூர் ரேசன் கடைகளில் முறைகேடு நடந்தால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என அதிகாரி பேசினார்.
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் தேசிய நுகர்வோர் தினவிழா இன்று நடந்தது.
வேலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் காமராஜ் வரவேற்று பேசினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி கலந்து கொண்டு நுகர்வோர் தின போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும் நுகர்வோர் விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டார்.
விழாவில் அவர் பேசியதாவது:-
பொருட்கள் வாங்கும்போது வியாபாரம் மூலம் ஏமாற்றப்படுகிறோம். இதனை தடுக்க நுகர்வோர் அமைப்பு தொடங்கப்பட்டது. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் கடந்த 2019-ம் ஆண்டு திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
பொருட்களின் தரம் சரியில்லை என்றால் அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். விலையை உயர்த்தி விற்பனை செய்வது, எடையை குறைத்து தருவது, பொருட்களில் கலப்படம் செய்வது என பல்வேறு தந்திரங்களை கையாண்டு வருகின்றனர்.
இதனை கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.பல்வேறு துறைகளில் பொதுமக்கள் சேவை சரியாக இல்லையெனில் புகார் அளிக்கலாம்.இது தொடர்பாக பள்ளி அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை முறையாக தெரிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் வியாபாரத்தில் ஏமாற்றப்படுவதை தடுக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் வியாபார நிறுவனங்களில் பொது மக்கள் ஏமாற்ற பட்டாலோ அல்லது ரேஷன் கடைகளில் ஏதாவது முறைகேடு நடந்தால் பொதுமக்கள் 9952314993,9445000184 என்ற எண்களில் புகார் அளிக்கலாம்.
அல்லது குறுந்தகவல் அனுப்பலாம் அதன்பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வழங்கல் அலுவலர் காமராஜ் கூறினார்.