உள்ளூர் செய்திகள்
மகளிர் தின விழாவில் கண்ணீர் விட்டு அழுத அமலு விஜயன் எம்.எல்.ஏ.
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் நடந்த மகளிர் தின விழாவில் அமலு விஜயன் எம்.எல்.ஏ. கண்ணீர் விட்டு அழுதது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தலைமை மருத்துவ அலுவலர் எம்.மாறன்பாபு தலைமை தாங்கினார். டாக்டர்கள் டி.ஆர்.அருளரசி, ஆர்.ஹேமலதா, மாலதி செல்வம் உள்ளிட்டோர் மருத்துவத் துறையில் பெண்களுக்கான சிகிச்சை முறைகளும் பெண்களுக்கான மருத்துவ வசதிகள் குறித்து பேசினர்.
நகர்மன்ற உறுப்பினர் எம்.சுமதி, மருந்து ஆய்வாளர் மகாலட்சுமி, இன்னர்வீல் சங்க நிர்வாகி விஜயலட்சுமிராமமூர்த்தி, பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு சுவாதி, திருவள்ளுவர் தொடக் கப்பள்ளி தலைமையாசிரியர் மலர்கொடி ஆகியோர் பெண்களின் பெருமைகள் குறித்து விரிவாக பேசினர்.
குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் அமலு விஜயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பயிற்சி முடித்த மருந்தாளு னர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
அப்போது அமலுவிஜயன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிருக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என கூறும் போது திடீரென தேம்பித் தேம்பி அழுதார்.
அப்போது அவர் எனக்கு 2 மகள்கள் மூத்த மகள் பிறந்தபோது 3 நாட்கள் அழுது கொண்டே இருந்தேன் பெண்ணாய் பிறந்தபோது எவ்வளவு துன்பம் அனுபவித்த தனக்கும் ஒரு பெண் பிறந்து விட்டாலே என கண்ணீர் விட்டேன்.
பல வகையிலும் எனக்கு துணையாக எனது தாயார் இருந்தார். சில மாதங்களுக்கு முன் என் தாயார் மறைந்துவிட்டார். தாயார் மறைந்தாலும் தாயார் ஸ்தானத்திலிருந்து அனைத்து சேவைகளும் எனது மகள்கள் செய்கின்றனர் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.
பெண்ணாக பிறந்தால் துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். ஆனாலும் பெண்கள் இல்லாத துறையே இல்லை. அனைத்து துறைகளிலும் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள் என பேசினார். எம்.எல்.ஏ. நிகழ்ச்சியில் அழுத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள், பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் மருந்தாளுநர் டி.ரவி நன்றி கூறினார்.