உள்ளூர் செய்திகள்
அண்ணா பல்கலைக்கழகம்

தொழில் நிறுவனங்களின் தேவைக்கேற்ப புதிய பாடத்திட்டம்- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

Published On 2022-03-08 11:30 IST   |   Update On 2022-03-08 12:48:00 IST
25 ஆண்டுகளுக்கு பிறகு பாடத்திட்டங்களை அண்ணா பல்கலைக்கழகம் மாற்றி அமைக்க உள்ளதாக பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

சென்னை:

அண்ணா பல்கலைக் கழக கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் பாடத் திட்டத்தை மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொழில் நிறுவனங்களின் தேவைக்கேற்ப புதிய பாடத் திட்டத்தை கொண்டுவரும் வகையில் சர்வதேச அளவிலான தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, பிற உயர்கல்வி நிறுவனங்களின் பாடத் திட்டம் ஆகியவற்றை ஆராய்ந்து அதற்கேற்ப புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட உள்ளது.

பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க பல்வேறு துறைகளின் பேராசிரியர்கள், தொழில்நிறுவன பிரதிநிதிகள், இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள், முன்னாள் மாணவர்கள் என 90 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

25 ஆண்டுகளுக்கு பிறகு பாடத்திட்டங்களை அண்ணா பல்கலைக்கழகம் மாற்றி அமைக்க உள்ளதாக பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை நீட்டிக்க கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள பல்கலைக்கழக குழு முடிவு செய்துள்ளது.

20 மாணவர்களுக்கு ஒரு பேராசிரியர் என்ற அளவில் பேராசிரியர்கள் உள்ளார்களா? உள்கட்டமைப்பு சரியாக உள்ளதா? போன்றவற்றை நேரில் ஆய்வு செய்து அங்கீகார நீட்டிப்பு வழங்கலாமா வேண்டாமா என்பதை அண்ணா பல்கலைக்கழக குழு முடிவு செய்ய உள்ளது.

அங்கீகார புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்க பொறியியல் கல்லூரிகளுக்கு மார்ச் இறுதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்... 5 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மாநகராட்சி பட்ஜெட் தயாரிக்கும் பணி தீவிரம்

Similar News