உள்ளூர் செய்திகள்
வேலூர் மாவட்டத்தில் உரங்கள் அதிக விலைக்கு விற்பதாக விவசாயிகள் மனு
வேலூர் மாவட்டத்தில் உரங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் மனு அளித்தனர்.
குடியாத்தம் தாழையாத்தம்பஜார் பச்சையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தாழையாத்தம் பஜார் கவுண்டன்யா மகாநதி ஆற்றங்கரை பச்சையம்மன் கோவில் தெருவில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்தோம்.நாங்கள் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம்.
தற்போது எங்கள் வீடுகளை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் இடித்துவிட்டார்கள். இதனால் எங்களுக்கு வீடு இல்லை. வாடகை வீடுகளில் தவித்து வருகிறோம்.
எனவே எங்களுக்கு மாற்று இடம் ஒதுக்கி வாழ்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் இவ்வாறு கூறியுள்ளனர்.
தேசிய உழவர் கூட்டமைப்பு சார்பில் அளித்த மனுவில் வேலூர் மாவட்டம் முழுவதும் உரம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. யூரியா ரூ.600 டி.ஏ.பி. 1800 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர்.
அணைக்கட்டு, ஒடுகத்தூர் பகுதியில் உரம் யூரியா ரூ.500 முதல் ரூ.700 வரை அதிகமாக விற்பனை செய்கிறார்கள்.
இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.உரம் விலை உயர்வை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.