உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

மாற்று இடம் வழங்கும் வரை குடியிருப்புகளை அகற்றக்கூடாது - கலெக்டரிடம் நொய்யல் கரையோர மக்கள் மனு

Published On 2022-03-07 07:40 GMT   |   Update On 2022-03-07 07:40 GMT
குடியிருப்புகளை காலி செய்யாமல் இருந்தால் வருகிற 9-ந்தேதி அன்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று அறிவித்துள்ளனர்.
திருப்பூர்:

திருப்பூர் காசிப்பாளையம் நொய்யல் ஆற்றின் கரையோரம் உள்ள குடியிருப்புகளை அகற்ற நீர்வளத்துறையினர் அறிவிப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இதனால் மாற்று இடம் வழங்கக்கோரி அப்பகுதியில் குடியிருக்கும் பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து முறையிட்டனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:

நொய்யல் ஆற்றின் கரையோரம் 36 குடும்பத்தினர் வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். எங்கள் குடியிருப்புக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு பெற்றுள்ளோம். ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் வைத்துள்ளோம். இந்தநிலையில் காங்கேயம் நீர்வளத்துறை கால்வாய் பிரிவு அதிகாரிகள் சார்பில் அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 

அந்த நோட்டீசில் நொய்யல் ஆறு நீர் நிலை புறம்போக்கு இடத்தில் குடியிருப்புகள் கட்டி வசித்து வருபவர்களுக்கு, குடியிருப்புகளை காலி செய்யுமாறு ஏற்கனவே 2 முறை முன்அறிவிப்பு கடிதம் வழங்கப்பட்டது.

இதுநாள் வரை ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை காலி செய்யவில்லை. வருகிற 8-ந் தேதிக்குள் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும். அதன்பிறகும் குடியிருப்புகளை காலி செய்யாமல் இருந்தால் வருகிற 9-ந்தேதி அன்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று அறிவித்துள்ளனர். 

எங்களுக்கு மாற்று இடம் வழங்கும் வரை குடியிருப்புகளை அகற்றுவதை நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
Tags:    

Similar News