உள்ளூர் செய்திகள்
கடன் தொல்லையால் பிஸ்கட் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை
வேலூரில் கடன் தொல்லையால் பிஸ்கட் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர்:
வேலூர் கொசப்பேட்டை லால்சிங் கும்மந்தான் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 30). பிஸ்கட் வியாபாரி.இவரது மனைவி சொர்ணமால்யா. கார்த்திகேயன் சொர்ணமால்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பிஸ்கட் சரிவர விற்பனையாகவில்லை. இதனால் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது.
கார்த்திகேயன் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் ரூ.20 லட்சம் கடன் வாங்கியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பித் தருமாறு கார்த்திகேயனுக்கு நெருக்கடி கொடுத்தனர்.
பணத்தை திருப்பி தர முடியாததால் விரக்தியில் இருந்த கார்த்திகேயன் நேற்று வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தூங்கினார்.
இதனைக்கண்ட அவரது மனைவி சொர்ணமால்யா கதறி துடித்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கார்த்திகேயனை மீட்டு வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு கார்த்திகேயனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயன் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா ? என விசாரணை நடத்தி வருகின்றனர்.