உள்ளூர் செய்திகள்
குடியாத்தம் பரதராமி அருகே தீக்காயம் அடைந்த அச்சக ஊழியர் சாவு
குடியாத்தம் பரதராமி அருகே தீக்காயம் அடைந்த அச்சக ஊழியர் இறப்பு குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம்:
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கலவகுண்டா கி நேரு நகரைச் சேர்ந்தவர் துரை பாபு வயது 40,இவர் திருப்பதியில் காலண்டர் வியாபாரம் செய்து வந்தார் மேலும் அச்சத்திலும் வேலை செய்து வந்துள்ளார்.
துரைபாபு குடியாத்தம் அடுத்த பரதராமி வீ.டி.பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சாமுண்டீஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு துரைபாபு தனது மாமியார் வீடான வீ.டி.பாளையத்திற்கு வந்து தங்கி இருந்தபோது தனது மனைவியின் தங்கையுடன் பேசிய அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த வாலிபரை கண்டித்துள்ளார்.
அப்போது ஏற்பட்ட தகராறில் துரைபாபுவிற்கு சரமாரியாக கத்தி குத்து விழுந்தது பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் இந்த சம்பவம் தொடர்பாக 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி இரவு தனது மாமியார் வீடான வீ.டி.பாளையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது யாரோ சிலர் பின்பக்கமாக மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டதாக கூறி தீக்காயங்களுடன் அலறி உள்ளார்.
அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையிலும் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக திருப்பதியில் உள்ள ரூயா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்துவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக கே.வி.குப்பம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி மேற்பார்வையில் பரதராமி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மர்மமான முறையில் உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டு இறந்துள்ள துரைபாபுவை முன்விரோதம் காரணமாக யாராவது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து விட்டார்களா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.