உள்ளூர் செய்திகள்
ஆரணி அருகே ஏரியை மீட்டுத்தரக்கோரி கிராம மக்கள் மறியல்
ஆரணி அருகே ஏரியை மீட்டுத்தரக்கோரி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நெசல் கிராமத்திற்குட்பட்ட திம்மந்தாங்கள் ஏரி சுமார் 30ஏக்கர் பரப்பளவு கொண்டது.
இந்த ஏரி பல ஆண்டு காலமாக நெசல் ஊராட்சிக்குட்பட்டு பஞ்சாயத்து வரைபடத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில ஏரியை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நெசல் கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு சுடுகாடு இந்த பகுதியில் உள்ளதால் சுடுகாடு பாதைகள் அடைக்கப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக ஆரணி கோட்டாச்சியரிடம் பலமுறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கை மேற்கொள்ளாத காரணத்தினால் ஆத்திரமடைந்த ஊர் பொதுமக்கள் சுமார் 100&க்கும் மேற்பட்டோர் ஆரணி விழுப்புரம் நெடுஞ்சாலையில் திடிரென சாலைமறியலில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர்.
ஆரணி டி.எஸ்.பி கோட்டீஸ்வரன் தலைமையில் போலீசார் சமரசம் செய்ய முயன்றனர்.
அப்போது ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஊராட்சி மன்றதலைவர் திடீரென சாலையில் நின்று கொண்டிருந்த வாகனத்தின் டயர் அடியில் படுத்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
உடனடியாக போலீசார் ஊராட்சி மன்ற தலைவரை சமரசம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக கூறியதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதனால் ஆரணி விழுப்புரம் நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.