உள்ளூர் செய்திகள்
தேர்தல்

திருப்பூர் சங்கராமநல்லூர் பேரூராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

Published On 2022-03-05 11:45 IST   |   Update On 2022-03-05 11:45:00 IST
திருப்பூர் சங்கராமநல்லூர் பேரூராட்சி மறுதேர்தலின்போது அ.தி.மு.க. சார்பில் 5, தி.மு.க. சார்பில் 2 கவுன்சிலர்கள் மட்டுமே தேர்தலுக்கு வந்தனர். இதனால் தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா சங்கராமநல்லூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் தி,மு.க.-8, அ.தி.மு.க.- 5, ம.தி.மு.க. 2 இடங்களில் வெற்றி பெற்றது. தலைவர் பதவிக்கு தி.மு.க., சார்பில் மல்லிகா என்பவர் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

நேற்று பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது. இந்தநிலையில் மல்லிகாவை எதிர்த்து தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர் பிரேமலதா வேட்பு மனு தாக்கல் செய்தார்.இதையடுத்து மறைமுக தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால் பல மணி நேரமாகியும் முடிவு அறிவிக்கப்படவில்லை.

இதையடுத்து தி.மு.க.வை சேர்ந்த போட்டி வேட்பாளர் பிரேமலதா தனது ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார். அவர் கூறுகையில், மறைமுக தேர்தலில் மல்லிகாவை விட கூடுதல் ஓட்டு பெற்றிருந்தேன். ஓட்டு எண்ணிக்கை முடிந்த நிலையில் தி.மு.க., கவுன்சிலர் சாதிக்அலி உள்ளிட்டோர் ஓட்டுச்சீட்டு மீது 'மை' ஊற்றி ரகளையில் ஈடுபட்டனர். ஓட்டுச்சீட்டு மீது மை ஊற்றியவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதுடன் உண்மையான தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும் என்றார்.

இதையடுத்து மறுதேர்தல் நடத்தப்படும் என பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அறிவித்தனர். ஆனால் மறுதேர்தலின்போது அ.தி.மு.க. சார்பில் 5, தி.மு.க. சார்பில் 2 கவுன்சிலர்கள் மட்டுமே தேர்தலுக்கு வந்தனர். இதனால் தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

Similar News