உள்ளூர் செய்திகள்
திமுக

வேலூர் மாநகராட்சியில் மேயர் தேர்தலை புறக்கணித்த தி.மு.க. கவுன்சிலர்கள்

Published On 2022-03-04 15:15 IST   |   Update On 2022-03-04 15:15:00 IST
வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மேயர் தேர்தல் நடந்த கூட்டத்திற்கு அனைத்து கவுன்சிலர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வேலூர்:

வேலூர் மாநகராட்சி மேயர் தேர்தல் இன்று நடந்தது.

இதில் கவுன்சிலர்கள் 48 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். அ.தி.மு.க.வை சேர்ந்த 7 பேர் முழுமையாக புறக்கணித்தனர். தி.மு.க.வை சேர்ந்த புஷ்பலதா வன்னிய ராஜா 7-வது வார்டில் போட்டியின்றி வெற்றி பெற்றார்.

இவர் இன்று மேயர் தேர்தல் நடந்தபோது கூட்டத்திற்கு வரவில்லை.

வேலூர் மேயர் பதவியை பெற புஷ்பலதா கடும் முயற்சி மேற்கொண்டார்.ஆனால் அவருக்கு மேயர் சீட் வழங்கவில்லை.

நேற்று புஷ்பலதா அவரது கணவர் வன்னியராஜா இருவரும் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.வை நேரில் சந்தித்தனர்.

அப்போது கட்சியில் பல ஆண்டுகளாக உழைத்து வருகிறோம். எங்களுக்கு ஏன் மேயர் பதவி தரவில்லை என கேள்வி எழுப்பினர். இந்த சம்பவம் வேலூர் தி.மு.க.வினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து புஷ்ப லதாவின் கணவர் வன்னிய ராஜா கூறுகையில்:-

வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மேயர் தேர்தல் நடந்த கூட்டத்திற்கு அனைத்து கவுன்சிலர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் எங்களுக்கு மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மற்றும் மேயராக அறிவிக்கப்பட்ட சுஜாதா ஆகியோரிடம் இருந்து எந்தவித அழைப்பும் வரவில்லை. அதனால் புஷ்பலதா கூட்டத்தை புறக்கணித்தார் என்றார்.

இதேபோல தி.மு.க.வை சேர்ந்த 2-வது வார்டு கவுன்சிலர் விமலா இன்று நடந்த மேயர் தேர்தல் நடந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மேயர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட பிறகு அவர் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தார்.

மேயர் தேர்தலை தி.மு.க கவுன்சிலர்கள் புறக்கணித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News