உள்ளூர் செய்திகள்
வேலூர் மாநகராட்சி கூட்டத்தில் மேயர் துணை மேயர் தேர்தலுக்கான வாக்குப் பெட்டி வைக்கப்பட்ட காட்சி.

வேலூர் மாநகராட்சியில் நாளை மேயர், துணை மேயர் போட்டியின்றி தேர்ந்தெடுக்க வாய்ப்பு

Published On 2022-03-03 16:21 IST   |   Update On 2022-03-03 16:21:00 IST
வேலூர் மாநகராட்சியில் நாளை மேயர், துணை மேயர் போட்டியின்றி தேர்ந்தெடுக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
வேலூர்:

வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 44 வார்டுகளில் தி.மு.க. வெற்றிபெற்று தனிப் பெரும்பான் மையுடன் கைப்பற்றியுள்ளது. 

தி.மு.க.கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் ஓரிடத்திலும், அ.தி.மு.க.7, சுயேச்சை வேட்பாளர்கள் 6 இடங்களிலும் பா.ம.க., பா.ஜ.க.தலா ஓரிடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். மாநகராட்சி அலுவலகம் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. மேயர் மற்றும் துணை மேயர் அறைகள் தயார் செய்துள்ளனர்.

இந்த நிலையில் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் 3 பேர் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 6-வது வார்டில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற சீனிவாசன் தி.மு.க.வில் இணைந்தார்.

இதேபோல 19-வது வார்டில் வெற்றிபெற்ற சுயேச்சை வேட்பாளர் மாலதி 48&வது வார்டில் வெற்றிபெற்ற சுயேச்சை கவுன்சிலர் கோகிலா ஆகியோர் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 

இதன்மூலம் வேலூர் மாநகராட்சியில் தி.மு.க.வின் பலம் 48 ஆக உயர்ந்துள்ளது. நாளை காலை 9.30 மணிக்கு மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் பதவிக்கான தேர்தல் நடக்கிறது. கூட்டம் ஆரம்பித்ததும் மேயர்பதவி பெண்கள் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்து மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பார். இதனைத்தொடர்ந்து மேயர் வேட்பாளர் வேட்பு மனுதாக்கல் செய்வார்.

தி.மு.க. தனிப்பெரும் பான்மையுடன் உள்ளதால் திமுக வேட்பாளர்  போட்டியின்றி தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்புள்ளது.

நாளை மேயர் பதவிக் கான தேர்தல் நடைபெற உள்ளதால் வேலூர் மாநகராட்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் செல்போன் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கூட்டரங்கில் மாநகராட்சி கமிஷனர் தவிர வேறு யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது. கவுன்சிலர்கள் எந்தவிதமான எலக்ட்ரானிக் பொருட்களும் கையில் வைத்திருக்கக் கூடாது. இதனை தொடர்ந்து மதியம் 2.30 மணிக்கு துணை மேயர் பதவிக்கான தேர்தல் நடக்கிறது. மேயர் பதவிக்கான தேர்தல் போலவே துணை மேயர் பதவிக்கான தேர்தலும் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

Similar News