உள்ளூர் செய்திகள்
பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் - மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பேச்சு
வணிகர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்களுடனான கூட்டம் நடந்தது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு தடை செய்யப்பட்டு, அவற்றின் செயல்பாடுகள் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறையின் அலுவல ர்களாலும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் சில பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு குறித்த சந்தேகங்கள் வணிகர் சங்க பிரதிநிதிகளால் எழுப்பப்பட்டது.
அதனைப் போக்கும் வகையில் மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை இணைந்து வணிகர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்களுடனான கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட சுற்று சூழல் பொறியாளர் பெ.சே.லிவிங்ஸ்டன் பங்கேற்றுப் பேசினார்.
அப்போது வணிகர்கள் 50 மைக்ரான் தடிமனுக்கு மேலான பொட்டலமிடும் கவர்களை மாவட்டத்தில் நிலவும் காலநிலையைக் கருத்தில் கொண்டு பரிசீலிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு பதிலளித்த மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழக அரசு பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை தடை செய்து ஆணை பிறப்பித்துள்ள சூழலில் அந்த கோரிக்கையை ஏற்க இயலாது.வணிகர்கள் பொட்டலமிடு வதற்காக பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது, இதனை மீறுவோர் மீது அபராதம் விதிப்பதை தவிர்க்க முடியாது என்றார்.
தொடர்ந்து, உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சுரேஷ் கூறும்போது, உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டத்தின் பிரிவுகள் குறித்தும், உணவுப் பொருள்களைப் பொட்டலமிடும்போது பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்தும் பேசினார். இதில், நீலகிரி மாவட்ட வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் பரமேஸ்வரன், நீலகிரி புறநகர் வணிகர்கள் சங்கத் தலைவர் முகமது பாரூக், ஊட்டி மார்க்கெட் வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.