உள்ளூர் செய்திகள்
மகா சிவராத்திரியை முன்னிட்டு கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் கோபுர தரிசனம்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் கோபுர தரிசனம்

Published On 2022-03-02 10:39 GMT   |   Update On 2022-03-02 10:39 GMT
மகாசிவராத்திரியை முன்னிட்டு பாடலீஸ்வரர் கோவில் முன்பு பரதநாட்டிய விழா நடைபெற்றது இதில் ஏராளமான மாணவ மாணவிகள் இரவு முழுவதும் பரதநாட்டியம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கடலூர்:

மகா சிவராத்திரி விழா கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மகா சிவராத்திரி விழா நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.

முன்னதாக மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு 8 மணிக்கு முதல்கால பூஜை, 11 மணிக்கு முதல் 2வது கால பூஜை, இன்று அதிகாலை 1.30 மணி முதல் லிங்கேத்பவர் அபிஷேகம், 2 மணிக்கு முதல் 3வது கால பூஜை, 4 மணிக்கு 4வது கால பூஜை நடைபெற்றது.

இன்று காலை அதிகார நந்தி கோபுர தரிசனம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு பாடலீஸ்வரர் பெரியநாயகி அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு நந்தீஸ்வரர் வாகனத்தில் சாமி கோவிலில் இருந்து வெளியில் வந்து கோபுரம் முன்பு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் சாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். பின்னர் சாமி வீதிஉலா நடைபெற்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

இதனைத் தொடர்ந்து நேற்று மாலை முதல் இன்று காலை வரை கடலூர் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடனும் வருகை தந்து கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் பயபக்தியுடன் விளக்கேற்றி சாமியை வழிபட்டு சென்றனர். அப்போது அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

முன்னதாக நேற்று மாலை மகாசிவராத்திரியை முன்னிட்டு பாடலீஸ்வரர் கோவில் முன்பு பரதநாட்டிய விழா நடைபெற்றது இதில் ஏராளமான மாணவ மாணவிகள் இரவு முழுவதும் பரதநாட்டியம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள வில்வநாதேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு வில்வநாதேஸ்வரர் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக பிரதோ‌ஷத்தை முன்னிட்டு நந்தீஸ்வரருக்கு பால் தேன் சந்தனம் உள்ளிட்ட அபிஷேக பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை நடந்தது. பின்னர் இரவு முழுவதும் வில்வநாதேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர்.
Tags:    

Similar News