உள்ளூர் செய்திகள்
பென்னாத்தூர் அரசு பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம்
பென்னாத்தூர் அரசு பள்ளிக்கு பூட்டு போட்டு பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்:
வேலூர் அருகே உள்ள பென்னாத்தூர் கேசவபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் 300&க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 4 ஆசிரியர்கள் உள்ளனர். போதுமான ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர்.
இந்த பள்ளியில் சேதம் அடைந்ததாக 2 கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. அதற்கு பதிலாக புதிய கட்டிடங்கள் எதுவும் கட்டப்படவில்லை.
தற்போது 2 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. மாணவர்களை மரத்தடியில் அமர வைத்து பாடம் சொல்லிக் கொடுக்கின்றனர். பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லை. அருகில் கழிவுநீர் தேங்கி உள்ளதால் பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது.
இந்த நிலையில் இன்று காலை பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப மறுத்து பெற்றோர்கள் பள்ளிக்கு பூட்டு போட்டனர்.
மேலும் பென்னாத்தூர் ஸ்ரீபுரம் சாலையில் பள்ளி குழந்தைகளுடன் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த வேலூர் தாலுகா போலீசார் மற்றும் வருவாய் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கேசவபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் சுற்றுச் சுவர் கட்ட வேண்டும். போதுமான வகுப்பறைகள் கட்டித் தரவேண்டும். மாணவர்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த மறியல் போராட்டத்தால் பென்னாத்தூர்&ஸ்ரீ¢புரம் சாலையில் இன்று காலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.