உள்ளூர் செய்திகள்
அறிவிப்பு பதாகை

குடியாத்தத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அறிவிப்பு பதாகைகளை கட்டிய அதிகாரிகள்

Published On 2022-03-01 16:08 IST   |   Update On 2022-03-01 16:08:00 IST
குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அறிவிப்பு பதாகைகளை கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
குடியாத்தம்:

குடியாத்தம் நகரின் நடுவே செல்லும் கவுண்டன்யமகாநதி ஆற்றின் இருபுறமும் சுண்ணாம்புபேட்டை ஆற்றோரம், காமராஜர் பாலம் ஆற்றோரம், பச்சையம்மன் கோவில் ஆற்றோரம், கெங்கையம்மன் கோவில் ஆற்றோரம், நாராயணதோப்பு, நெல்லூர் பேட்டை என்.எஸ்.கே.நகர், பாவோடும் தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றின் இருபுறமும் 1500க்கும் அதிகமான வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தது.

இந்த வீடுகளில் பெரும்பாலும் கூலி தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக வசித்து வந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கவுண்டன்ய மகாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல ஆயிரம் கன அடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்பு வீடுகளை கணக்கெடுத்து அகற்ற முடிவு செய்திருந்தது. 

இந்நிலையில் உயர்நீதிமன்றம் நீர்நிலைப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களாக கவுண்டன்யமகாநதி ஆற்றுப் பகுதியில் உள்ள ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை நீர்வள ஆதார துறை அதிகாரிகள் மேற்பார்வையில் பொக்லைன் எந்திரங்கள் கொண்டு அகற்றப்பட்டு வருகிறது. தற்போது பெரும்பாலான வீடுகள் அகற்றப்பட்டன. 

குடியாத்தம் நெல்லூர் பேட்டை பாவோடும் தோப்பு பகுதியில் உள்ள திருவள்ளுவர் தெரு, வா.உ.சி.தெரு, முருகசாமி தெரு, செல்லியம்மன் கோவில் தெரு, பெரியார்தெரு, அன்னை சத்யா தெரு உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் அதிகமான வீடுகள் உள்ளன இந்த வீடுகளை அகற்ற உள்ளதால் நீர்வள ஆதார துறை யினர் வருவாய்த்துறையினர் உள்ளிட்ட துறை அதிகாரிகள் 21 நாள் கால அவகாசம் கொண்ட நோட்டீசை வழங்க அப்பகுதிக்கு சென்றனர். 

அப்பகுதி பொதுமக்கள் நோட்டீஸ் வாங்க மறுத்துவிட்டனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் நோட்டீஸ் பதாகைகளாக அப்பகுதியில் ஆங்காங்கே கட்டி வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News