உள்ளூர் செய்திகள்
மாணவி தீபலட்சுமி

ரஷியா குண்டுமழை பொழிந்ததால் உக்ரைனில் பயத்தில் தவித்தோம்-ஆரணி மாணவி பரபரப்பு தகவல்

Published On 2022-03-01 15:36 IST   |   Update On 2022-03-01 15:36:00 IST
ரஷியா குண்டுமழை பொழிந்தததால் உக்ரைனில் பயத்தில் தவித்ததாக ஆரணி திரும்பிய மாணவி தெரிவித்தார்.
ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த எஸ்.வி.நகரம் கிராமத்தை சேர்ந்த நெசவு தொழிலாளி தயாளன் பரமேஸ்வரி தம்பதியினருக்கு தீபாலட்சுமி வனிதா என்ற 2 மகள்கள் உள்னர்.

இதில் தீபலட்சுமி உக்ரைன் உஸ்மாராத் பகுதியில் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். உக்ரைன், ரஷ்யா போரால் அங்கு படிக்கும் தமிழக மாணவர்கள் தவித்து வருகின்றனர். உணவு கிடைக்காமல் மாணவர்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.

தமிழக மாணவர்களை மீட்க மத்திய அரசும், தமிழக அரசும் ஏற்பாடு செய்து வருகிறது. மத்திய அரசு எடுத்த நடவடிக்கை மூலம் நேற்று நள்ளிரவு இண்டியன் ஏர்லைன் விமானம் மூலம் மாணவி தீபலட்சுமி சென்னை விமான நிலையம் வந்தார்.

நாடு திரும்பிய மாணவர்களை வெளிநாடு வாழ்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்பு அளித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.  பின்னர் மாணவி ஆரணி வந்தார். 

அப்போது மாணவி தீபலட்சுமி கூறியதாவது:-

ரஷ்யா உக்ரைனில் குண்டு மழை பொழிந்ததால் நாங்கள் மனதளவில் பயத்தில் தவித்தோம். வெளியுறவு அமைச்சகம் மூலம் தங்களை பத்திரமாக மீட்ட மத்திய அரசுக்கும் அதற்கு கோரிக்கை விடுத்த தமிழக அரசுக்கும் தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்றார்.

Similar News