உள்ளூர் செய்திகள்
டீன் ஏஜ் மாணவ-மாணவிகள் பெற்றோரை கேட்டு முடிவு எடுக்க வேண்டும்
டீன் ஏஜ் மாணவ-மாணவிகள் பெற்றோரை கேட்டு முடிவு எடுக்க வேண்டும் என்று வேலூர் முதன்மை கல்வி அலுவலர் அறிவுரை வழங்கினார்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் கல்வியில் முதன்மை பெறவேண்டும் என்பதற்காக மாணவ மாணவிகளுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு பயிலரங்கம் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் கே.எம்.ஜோதீஸ்வரபிள்ளை வரவேற்று பேசினார். ஜுனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் தொகுப்புரையாற்றினார். திருக்குறள் இயக்க தலைவர் கவிமாமணி அறிவுச்சுடர், கல்வி உலகம் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் எஸ்.எஸ்.சிவவடிவு, பள்ளி துணை ஆய்வாளர் அ.மணிவாசகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி பேசியதாவது:-
வேலூர் மாவட்ட மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கி தங்களின் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். தாய் தந்தை ஆகிய இருவரும் 2 கண்கள். எனவே நீங்கள் அவர்கள் சொல்படி தான் நீங்கள் நடக்க வேண்டும்.
தாய் என்பவள் போற்ற தகுந்தவள், நான் கஷ்டப்பட்டாலும் என் மகள், மகன் கஷ்டபடக்கூடாது என்று நினைத்து கொண்டு இருப்பாள்.
நீங்கள் இப்போது டீன் ஏஜ் என்று சொல்லக்கூடிய இளவயது மாணவிகளுக்கு நாம் செய்வது சரியா தவறா எனமுடிவெடுக்க முடியாது. இப்போது உங்களுக்கு தெரியாது. நீங்கள் உங்களது தாய் மற்றும் தந்தையர் சொல்வதை கேட்டு நடக்க வேண்டும்.
நான் இன்று உங்கள் முன்னே மாவட்ட முதன்மைக்கல்வி அலுவராக நிற்கின்றேன் என்றால் அதற்கு எனது தாயாரும், தந்தையும் காரணம். எனது தந்தை கூறிய கருத்துக்களை கேட்டறிந்து அதன் வழி நடந்தன் விளைவு இன்று நான் அதிகாரி. உங்களது வாழ்க்கை சிறப்படைய ஆசிரியர்கள் பாடுபடுகிறார்கள்.
அனைத்து மாணவர்களும் கல்வி பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் பயிற்சி அளிக்கின்றனர் இதனை உணர்ந்து சிறப்பாக கல்வி பெற்று வாழ்க்கையில் உயர வேண்டும்.தன்னம்பிக்கை, விடா முயற்சி, கடின உழைப்பு ஆகிய மூன்றும் உங்களிடம் இருந்தால் நீங்கள் மிக சிறந்த மாணவர்களாக முன்னேறலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.