உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

பணிச்சுமையால் அவதிப்படுகிறோம் என்று ஆயுதப்படை பெண் போலீசார் கண்ணீர் மல்க குமுறல்

Published On 2022-02-26 15:04 IST   |   Update On 2022-02-26 15:04:00 IST
பணிச்சுமையால் அவதிப்படுகிறோம் என ஆயுதப்படை பெண் போலீசார் கண்ணீர் மல்க குமுறினர்.
வேலூர்:

வேலூர் ஆயுதப்படை குடியிருப்பில் நேற்று பெண் காவலர் இந்துமதி என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்துமதி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆயுதப் படையில் உள்ள பெண் போலீசார் கடும் மன உளைச்சலில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில்:- 

ஆயுதப் படையில் பணியாற்றி வரும் பெண் போலீசாருக்கு தொடர்ந்து பணி வழங்கப்படுகிறது.

மேலும் வார விடுமுறை அளிப்பது இல்லை தேர்தல் அறிவித்த பிறகு கொஞ்சம் கூட ஓய்வில்லாமல் வேலை பார்த்து வருகிறோம்.

பெண் போலீசார் பலர் திருமணமானவர்கள்.அவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர்.தொடர்ந்து பணி அளிப்பதால் குடும்பத்தோடு நேரத்தை செலவிட முடியவில்லை. மேலும் குழந்தைகளையும் சரியாக கவனிக்க முடியாமல் அவதிப் படுகிறோம்.

ஆயுதப் படையில் பணியாற்றும் போலீசாரிடம் அதிகாரிகள் அவர்களுக்கான குறைகளை கேட்டு அறிவதில்லை.

மாதத்தில் ஒரு முறையாவது ஆயுதப்படை பெண் போலீசாரிடம் குறைகள் குறித்து அதிகாரிகள் கேட்டறிய வேண்டும். அதன் மூலம் மன உளைச்சல் தவிர்க்கப் பட வாய்ப்பு உள்ளது.

பணி சுமை அதிகரித்து வருவதால் மன உளைச்சலுக்கு தள்ளப்படுகிறோம். 

இதுபோன்ற கஷ்டத்தை நீக்க போலீஸ் உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

Similar News