உள்ளூர் செய்திகள்
வேலூரில் சாலை அமைக்கும் பணிகள் 55 சதவீதம் நிறைவு
வேலூர் மாநகராட்சி பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் 55 சதவீதம் நிறைவடைந்தது.
வேலூர்:
வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாதாளசாக்கடை பணிகள் கால்வாய் அமைக்கும் பணிகள் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
தொடர்ந்து சில ஆண்டுகளாக பணிகள் நடந்து வருவதால் மாநகராட்சியில் உள்ள தெருக்கள் சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக காட்சி அளித்தன. இதனால் மழைக்காலங்களில் பொதுமக்கள் படாத பாடுபட்டனர்.
இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் முடிவடைந்த தெருக்களில் சாலை அமைக்கும் பணிகள் விரைவாக நடந்து வருகிறது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்:-
வேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. பாதாள சாக்கடை, கால்வாய் அமைக்கும் பணிகள் முழுவதுமாக முடிவடைந்த தெருக்கள் சாலைகளில் சிமெண்ட் சாலை, தார் சாலை அமைக்கும் பணிகள் துரிதப் படுத்தப் பட்டுள்ளன.
இன்று வரை மாநகராட்சி பகுதியில் 55 சதவீத சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 மாதங்களில் மாநகராட்சியில் உள்ள அனைத்து தெருக்களில் சாலை பணிகள் நிறைவடைந்து விடும்.
பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய பகுதிகளில் சாலை பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது என்றனர்.