உள்ளூர் செய்திகள்
வேலூர் மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க-8,693, காங்கிரஸ் கட்சிக்கு 3,164 வாக்குகள்
வேலூர் மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க-8,693, காங்கிரஸ் கட்சிக்கு 3,164 வாக்குகள் பெற்றுள்ளன.
வேலூர்
வேலூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் ஏற்கனவே 2 வார்டுகளில் தி.மு.க. வேட்பாளர் கள் போட் டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள 58 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிவுகள் வெளியாகின. அதனடிப்படையில், மாநகராட்சியில் 44 வார்டுகளை தி.மு.க.வும், 7 வார்டுகளை அ.தி.மு.க.வும், சுயேட்சைகள் 6 வார்டுகளையும், பா.ஜ.க, பா.ம.க, விடுதலை சிறுத்தைகள் தலா ஒரு வார்டுகளையும் கைப்பற்றியுள்ளன.
தேர்தலில் தேசிய கட்சியான பாஜக மாநகராட்சிக்கு உட்பட்ட 35 வார்டுகளில் தனித்து களமிறங்கியது. அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை, பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலர் வேலூர் இப்ராஹிம் உள்பட முக்கிய நிர்வாகிகளும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, மாநகராட்சி 18-வது வார்டில் மட்டும் பா.ஜ.க வேட்பாளர் சுமதிமனோகரன் 109 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன்மூலம், வேலூர் மாநகராட்சியில் பாஜக முதன்முதலாக தடம் பதித்து உள்ளது.
இந்த தேர்தலில் பா.ஜ.க. போட்டியிட்ட 35 வார்டுகளிலும் சேர்த்து மொத்தம் 8693 வாக்குகள் பெற்றுள் ளதுடன், தோல்வியடைந்த வார்டுகள் பெரும்பாலானவற்றிலும் அக்கட்சி 2-வது, 3-வது இடத்திலேயே உள்ளது.
இது வேலூரில் திமுக, அதிமுகவுக்கு அடுத்த நிலையில் பாஜக ஒரு முக்கிய கட்சியாக உருவெடுக்க தொடங்கியிருப்பதை காட்டுகிறது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
அதேசமயம், தி.மு.க கூட்டணியில் 3 வார்டுகளை பெற்று போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி அந்த 3 வார்டுகளிலும் தோல்வி அடைந்துள்ளது. இந்த 3 வார்டுகளிலும் அக்கட்சிக்கு மொத்தம் 3164 வாக்குகள் கிடைத்துள்ளது.