உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலை அறிவியல் பூங்கா சாத்தனூர் அணையில் நாளை முதல் சுற்றுலா பயணிகள் அனுமதி
திருவண்ணாமலை அறிவியல் பூங்கா சாத்தனூர் அணையில் நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுளள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் அணை தமிழகத்தில் பெரிய அணைகளில் முக்கியமானதாகும். இந்த அணையில் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்களும், இயற்கையான சூழலும் சுற்றுலா வருபவர்களுக்கு மகிழ்வூட்டுவனவாக உள்ளன.
இங்குள்ள முதலைப்பண்ணையில் 100-க்கும் மேற்பட்ட முதலைகள் உள்ளன.
பூங்கா பகுதியில் அழகிய நீச்சல் குளம் ஒன்று உள்ளது. விடுமுறை நாட்கள் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் சாத்தனூர் அணை பூங்காவில் பொழுதைக் கழிப்பதற்காக உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வார்கள்.
கொரனோ பரவல் காரணமாக பல மாதங்களாக சாத்தனூர் அணையில் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை முதல் பொழுதுபோக்கு பூங்காக்கள் நீச்சல் குளங்கள் அணைகள் போன்றவை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படும் என்று கலெக்டர் அறிவித்துள்ளார்.
அதன்படி சாத்தனூர் அணை பூங்காவில் பல மாதங்களுக்குப் பிறகு நாளை முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதனால் பூங்கா பகுதியில் சுத்தம் செய்யும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதேபோல் மிருகண்டா அணை, குப்பநத்தம் அணை பகுதியிலும் நாளை முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள அறிவியல் பூங்கா பல மாதங்களாக மூடிக்கிடக்கிறது. பொதுமக்கள் செல்லாததால் பூங்கா முழுவதும் குப்பையாக காட்சி அளிக்கின்றன.
திருவண்ணாமலை நகரப் பகுதியில் உள்ள பொதுமக்கள் பலர் இந்த பூங்காவில் நடை பயிற்சி செய்வார்கள்.நாளை முதல் அறிவியல் பூங்காவில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதற்கு முன்பாக பூங்காவை சுத்தம் செய்து தடுப்பு மருந்து தெளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.