உள்ளூர் செய்திகள்
சீர்காழி நகராட்சி அலுவலகம்.

சீர்காழி நகராட்சியை கைப்பற்றுவது யார்?

Published On 2022-02-24 15:19 IST   |   Update On 2022-02-24 15:19:00 IST
சீர்காழியை நகராட்சியை கைப்பற்றுவது யார்? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
சீர்காழி:

சீர்காழி நகராட்சி 1.10.1972-ம் ஆண்டு 3ம் நிலை நகராட்சியாக அமைக்கப் பெற்றது. பின்னர் 1979ஆம் ஆண்டு இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 

2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சீர்காழி நகரின் மக்கள்தொகை 34 ஆயிரத்து 880ஆகும். இதில் ஆண்கள் 17,215. பெண்கள் 17,663 பேர் உள்ளனர். சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. 

நடந்து முடிந்த நகர்மன்ற தேர்தலில் சீர்காழி நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டதில் தி.மு.க.வை சேர்ந்த 11 பேர், அ.தி.மு.கவை சேர்ந்த 3 பேர், பா.ம.கவை சேர்ந்த 2 பேர், தே.மு.தி.க, ம.தி.மு.க.வில் தலா ஒருவர் மற்றும் சுயேச்சைகள் 6 பேர் வெற்றி பெற்றுள்ளனர். வரும் மார்ச் 4&ம் தேதி சீர்காழி நகர்மன்ற தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெறவுள்ளது.

இதனிடையே நகர்மன்ற தலைவர் பதவியை பெற 13 உறுப்பினர்கள் தேவையான நிலையில் தனி பெரும்பான்மையில்லாத தி.மு.க மேலும் தேவையான இரண்டு சுயேச்சை உறுப்பினர்கள் ஆதரவை பெற்று சீர்காழி நகர்மன்ற தலைவர் பதவியை பெறுவார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

இதனிடையே திமுக கூட்டணி கட்சியான ம.தி.மு.கவை சேர்ந்த முழுமதி வெற்றி பெற்றுள்ளார். இவர் ம.தி.மு.க மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பாளர் மார்கோனி தாயார் ஆவார்.

தி.மு.க தலைமையிடம் கூட்டணி கட்சியான ம.தி.மு.க.விற்கு சீர்காழி நகர்மன்ற தலைவர் பதவியை கேட்டு பெற ம.தி.மு.க தரப்பில் முயற்சி நடைபெறுவதாக தெரிகிறது. அவ்வாறு சீர்காழி நகர்மன்ற தலைவர் பதவி ம.தி.மு.கவிற்கு ஒதுக்கப்பட்டால் தி.மு.கவின் 11 உறுப்பினர்கள் மற்றும் தேவையான சுயேச்சைகளின் ஆதரவை பெற்று ம.தி.மு.க நகர்மன்ற தலைவர் பதவியை பெற்றிட முனைப்பு காட்டிவருகின்றனர். 

இவ்வாறு சீர்காழி நகர்மன்ற தலைவர் பதவிக்கு தனிபெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்காததால் யார் சீர்காழி நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற உள்ளார்கள் என்ற எதிர்பார்ப்பு சீர்காழி மக்களிடம் மேலோங்கியுள்ளது.

தற்போது 6 வருடங்களுக்கு பிறகு சீர்காழி நகராட்சி தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில் யார் சீர்காழி நகராட்சியை கைப்பற்றபோகிறார்கள் என்ற ஆவல் மக்களிடையே கூடியுள்ளது.

Similar News