உள்ளூர் செய்திகள்
வேலைவாய்ப்புக்கு ஏற்ற வகையில் தொழிற்கல்வி பாடங்கள் திருத்தும் பணி
வேலைவாய்ப்புக்கு ஏற்ற வகையில் தொழிற்கல்வி பாடங்கள் திருத்தும் பணியில் வேலூர் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர்
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் மேல்நிலை பள்ளிகளில் தற்போது நடைபெற்று வரும் தொழிற்கல்வி பாடங்கள் வேலைவாய்ப்புக்கு ஏற்ற வகையில் திருத்தி அமைக்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
தணிக்கையியல், அடிப்படை மின் பொறியியல், அடிப்படை மின்னணுவியல், அடிப்படை இயந்திரவியல், (நர்சிங்) செவிலியம், வேளாண் அறிவியல், ஆடை வடிவமைத்தல் தயாரித்தலும், அலுவலக செயலரியல் உள்ளிட்ட 8 பாடங்கள் வேலை வாய்ப்புக்கு ஏற்ற வகையில் திருத்தி அமைப்பதற்கான தொழிற்கல்வி ஆசிரியர் களுக்கான பணிமனை தொடங்கியது.
இந்த பயிற்சியில் காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன் மற்றும் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த தொழிற்கல்வி ஆசிரியர் க.ராஜா உள்ளிட்டோர் வேலூர் மாவட்டத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த பணிமனையானது மார்ச் 15-ந் தேதி வரை சென்னை சேத்துப்பட்டு எம்.சி.சி. மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடை பெறுகிறது.
இந்த பயிற்சி வகுப்பில் 11,12-ம் வகுப்புக்கான பாடத்திட்டங்கள் திருத்தி அமைக்கப்பட உள்ளன.
மாநில கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, பள்ளிக் கல்வித்துறையும் இணைந்து இப் பணிமனையை நடத்துகின்றனர்.