உள்ளூர் செய்திகள்
சேத்துப்பட்டில் லாரி மோதி ஐ.டி.ஐ. மாணவர் சாவு
சேத்துப்பட்டில் லாரி மோதி ஐ.டி.ஐ. மாணவர் தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள கொளக் கரவாடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் இவரது மகன் சூர்யா (வயது 19).
இவர் செய்யாறில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஐ.டி.ஐ. படித்து முடித்துள்ளார். சூர்யா நேற்று அதிகாலை தனது பைக்கில் கொளக்கரவாடி கிராமத்திலிருந்து சேத்துப்பட்டு வந்தவாசி சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே மதுரையிலிருந்து அலுமினிய சாமான்களை ஏற்றி வந்த லாரி திடீரென எதிர்பாராதவிதமாக சூர்யா ஓட்டி சென்ற பைக் மீது மோதியது.
இதில் சூர்யா லாரியின் அடியில் சிக்கி கொண்டு தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த சேத்துப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து சூர்யாவின் தந்தை வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து சேத்துப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.