உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

திருவண்ணாமலை நகராட்சியில் 31 வார்டுகளில் தி.மு.க. வெற்றி

Published On 2022-02-23 14:15 IST   |   Update On 2022-02-23 14:15:00 IST
திருவண்ணாமலை நகராட்சியில் 31 வார்டுகளில் தி.மு.க. வெற்றிபெற்றுள்ளது.
திருவண்ணாமலை:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள 39 வார்டுகளுக்கும் கடந்த 19-ந் தேதி தேர்தல் நடைபெற்றது.

25 -வது வார்டில் கள்ள ஓட்டு புகார் எழுந்ததால் நேற்று முன்தினம் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. இதை தொடர்ந்து நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தபால் ஓட்டுகள் 2.30 மணி நேரம்வரை எண்ண பட்டதால் மற்ற வாக்குகளை எண்ணுவதற்கு தாமதமானது. 

அனைத்து வாக்குகளும் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் தி.மு.க. 31 வார்டுகளில் வெற்றி பெற்றது. 6 வார்டுகளில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. அ.தி.மு.க. வேட்பாளர்கள் டாக்டர் பழனி, சந்திரபிரகாஷ் ஆகியோர் தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக அதிக வாக்குகள் பெற்றனர். 2வார்டுகளில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். 

மறுவாக்குபதிவு நடைபெற்ற 25-வது வார்டில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. உள்பட 8 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் சுயேச்சை வேட்பாளர் ஸ்ரீதேவி பழனி 648 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க.வேட்பாளர் 511 வாக்குகள் பெற்றிருந்தார்.பா.ஜ.கவேட்பாளர் 24 ஓட்டுகளும், அ.தி.மு.க.வேட்பாளர் 8 ஓட்டுக்களும் பெற்று டெபாசிட் இழந்தனர். 

மறுவாக்குப்பதிவு அறிவித்த போதிலும் மனம் கலங்காமல் போராடி தென்னைமரம் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சுயேட்சை வேட்பாளர் ஸ்ரீதேவி பழனியை வார்டு மக்கள் பாராட்டினர்.

மேலும் 35-வது வார்டில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் பாப்பாத்தி கைப்பை சின்னத்தில் போட்டியிட்டு அ.தி.மு.க.வேட்பாளர் ஜரினாபாவை விட 14 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஜரினாபா 1,075 வாக்குகளும், பாப்பாத்தி 1,089 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

திருவண்ணாமலை நகராட்சியில் போட்டியிட்ட 6 சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை. மேலும் தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க.மற்றும் பா.ஜ.க.உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் 201பேர் டெபாசிட் இழந்தனர். 

திருவண்ணாமலை நகராட்சியில் 31 வார்டுகளில் வெற்றி பெற்றதால் தி.மு.க.வினர் உற்சாகமடைந்துள்ளனர். 

இதில் 39-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் நிர்மலா வேல்மாறன் 2,375 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதேபோல் 8-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் ராஜாத்தி விஜியராஜ் 2,128 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

Similar News