உள்ளூர் செய்திகள்
வேலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் 3 மோப்ப நாய் கொண்டு போலீசார் சோதனை.

வேலூர் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் நாளை மதியம் 3 மணிக்குள் தெரிந்துவிடும்

Published On 2022-02-21 15:43 IST   |   Update On 2022-02-21 15:43:00 IST
வேலூர் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் நாளை மதியம் 3 மணிக்குள் தெரிந்து விடும் வெற்றி கொண்டாட்டத்தில் பட்டாசு வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
வேலூர்:

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று நடந்தது.

இதனை தொடர்ந்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அதற்கு பிறகு மின்னணு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும்.

தபால் ஓட்டு மற்றும் எந்திரத்தில் பதிவான ஓட்டுகள் முழுமையாக எண்ணி முடித்த பிறகு ஒவ்வொரு வார்டின் முடிவுகள் வெளியிடப்படும்.

தபால் ஓட்டுகள் தலைமை ஏஜென்டுகள் முன்னிலையில் பிரித்து எண்ணப்படும். இதில் எந்தவித புகாரும் வராத வண்ணம் எண்ணிக்கை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாநகராட்சியில் மொத்தம் 18 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்காக 15 மேஜைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வார்டு எண்ணிக்கை முடிந்ததும் முடிவுகள் அறிவிக்கப்படும். 

இதனால் நாளை மதியம் 3 மணிக்குள் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவர வாய்ப்பு உள்ளது.
நகராட்சி பேரூராட்சிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய 2 மணி நேரத்திற்குள் முடிவுகள் முழுமையாக வெளியாகிவிடும்.

மொத்தம் 140 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவார்கள்.இதுதவிர 200 அரசு ஊழியர்களும் மற்ற பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஒவ்வொரு வார்டு வாக்கு எண்ணிக்கையின் போது அந்த வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

அந்த வார்டு வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் அவர்கள் அப்படியே வெளியேற்றப்படுவார்கள். அதற்கு பிறகு எண்ணப்படும் வார்டுகளின் வேட்பாளர்களின் முகவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

மாவட்டம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை மையம் மற்றும் முக்கிய இடங்களில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக வெற்றிக் கொண்டாட்டத்தில் பட்டாசு வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

 பேட்டியின்போது தேர்தல் பார்வையாளர் பிரதாப் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் மாநகராட்சி தேர்தல் பார்வையாளர் அஜய் சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

Similar News