உள்ளூர் செய்திகள்
வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை வாக்கு எண்ணிக்கை
வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
வேலூர்
ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளன. முடிவுகளை ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் அறிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சி, 2 நகராட்சிகள், 4 பேரூராட்சிகள், உள்ளாட்சித் தேர்தல் நேற்று முன் தினம் நடைபெற்றது.
மாநகராட்சி, நகராட்சிகளை காட்டிலும் பேரூராட்சிகளிலேயே அதிகப்படியான வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், பதிவான வாக்குகள் நாளை (22-ந்தேதி) எண்ணப்படுகின்றன.
வேலூர் மாநகராட்சி தேர்தலில்பதிவான வாக்குகள் தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியிலும், குடியாத்தம் நகராட்சியில் பதிவான வாக்குகள் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியிலும், பேரணாம்பட்டு நகராட்சியில் பதிவான வாக்குகள் மேரிட் ஹாஜி இஸ்மாயில் சாகிப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எண்ணப்பட உள்ளன.
அதேபோல, ஒடுகத்தூர், பள்ளிகொண்டா பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் பள்ளிகொண்டா லிட்டில் பிளவர் கான்வென்ட் பள்ளியிலும், பென்னாத்தூர், திருவலம் பேரூராட்சியில் பதிவான வாக்குகள் பள்ளிகொண்டா டிரங் ரோட்டில் உள்ள ஆர்.சி.எம். பள்ளி வளாகத்தில் நாளை எண்ணப்பட உள்ளன.
வாக்கு எண்ணும் மையங்களில் குடிநீர், கழிப்பறை, தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களுக்கு வருவோர்களுக்கு தங்களுக்கான அனுமதி சீட்டை உடன் கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அனுமதி சீட்டு இல்லாதவர்கள் எக்காரணத்தை கொண்டும் உள்ளே அனுமதிக்க முடியாது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.