உள்ளூர் செய்திகள்
வேலூர் சாய்நாதபுரத்தில் சாலை வசதி கேட்டு பொதுமக்கள் மறியல்
வேலூர் சாய்நாதபுரத்தில் சாலை வசதி கேட்டு பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
வேலூர்:
வேலூர் சாய்நாதபுரம் தனியார் பெண்கள் கல்லூரி பின்புறம் சாஸ்திரி நகர், கணபதி நகர், முருகன் நகர், கன்னிகாபுரம், செட்டியார்தோப்பு, வள்ளலார் நகர் போன்ற பகுதிகள் உள்ளன.
இந்த பகுதிக்கு செல்லும் பொதுமக்கள் தனியார் பெண்கள் கல்லூரியை ஒட்டி உள்ள சாலையை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த சாலை சீரமைக்க படவில்லை.மேலும் சாலையை அடைத்து சுற்றுச் சுவர் கட்ட உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை சாய்நாதபுரத்தில் உள்ள ஆரணி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை நேரம் என்பதால் அதிக அளவில் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் சாலையில் வந்தன. மறியல் போராட்டத்தால் இந்த வாகனங்கள் அனைத்தும் சாலையில் அணிவகுத்து நின்றன.
சுமார் 2 கிலோ மீட்டருக்கு மேல் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனையடுத்து வாகனங்கள் அனைத்தும் தொரப்பாடி சாலையில் திருப்பிவிடப்பட்டன.
பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தற்போது மாநகராட்சி தேர்தல் பணிகள் நடந்து வருகிறது. பணிகள் முடிந்த பிறகு அதிகாரிகள் மூலம் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர்.இதனைதொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.