உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலை நகராட்சி 25-வது வார்டில் இன்று மறுவாக்குப்பதிவு நடந்தது.

திருவண்ணாமலை 25-வது வார்டில் விறு விறுப்பாக நடந்த மறுவாக்குப்பதிவு

Published On 2022-02-21 14:43 IST   |   Update On 2022-02-21 14:43:00 IST
திருவண்ணாமலை 25-வது வார்டில் விறு விறுப்பாக மறுவாக்குப்பதிவு நடந்தது. வாக்காளர்கள் மீண்டும் ஆர்வமுடன் வந்து ஓட்டு போட்டனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் நகராட்சிக்குட்பட்ட 39 வார்டுகளில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட 25-வது வார்டில் பா.ஜ.க. சார்பில் சுகந்தி, அ.தி.மு.க. சார்பில் மணிமேகலை, தி.மு.க  சார்பில் முனியம்மாள் உள்பட 8 பேர் போட்டியிட்டனர்.

இதில் சுயேட்சையாக ஸ்ரீதேவி என்பவர் போட்டியிட்டார்.  தென்னை மரச் சின்னத்தில் போட்டியிடும் ஸ்ரீதேவியின் கணவர் பழனி இப்பகுதி மக்கள் மத்தியில் பிரபலமானவர் என்று கூறப்படுகிறது.

இந்த வார்டில் சமுத்திரம் ஏரிக்கரை,  சந்தைமேடு, பெரும்பாக்கம் ரோடு ,ராஜீவ் நகர், அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ரமணா நகர், அக்னிலிங்கம் குறுக்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில உள்ளன. மொத்தம்  1,590 ஓட்டுக்கள் உள்ளன.

இந்த நிலையில் திருவண்ணாமலை நகராட்சி வார்டுகளுக்கான ஓட்டுப்பதிவு நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் 25-வது வார்டுக்கான ஓட்டுப்பதிவு சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

காலையில் தொடங்கி மதியம் வரை 50 சதவீதம் ஓட்டுகள் இந்த வார்டில் பதிவாகின. இதை அறிந்த பா.ஜ.க. மற்றும் திராவிட கட்சிகள்மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனால் சந்தேகம் அடைந்த தி.மு.க.வினர் நேற்று முன்தினம் பகல் 12 மணிக்கு சண்முகா தொழிற்சாலை பள்ளிக்கு வந்தனர். சுயேட்சை வேட்பாளர் ஸ்ரீதேவி ஆட்களை திரட்டி வந்து கள்ள ஓட்டு போடுவதாக கூறி அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் ஓட்டு பதிவு நிறுத்தப்பட்டது.

முறைகேடு நடப்பதாக கூறி தி.மு.க. வேட்பாளருடன் இணைந்து அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.

இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான முருகேஷை சந்தித்து மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று மனு கொடுத்தனர்.

அதன் பின்னர் மாவட்ட தேர்தல் பார்வையாளர் சங்கீதா உடனடியாக சண்முகா தொழிற்சாலை பள்ளிக்கு விரைந்து வந்தார். மாலை வரை நடந்த ஓட்டுப்பதிவை பார்வையிட்டார். 

ஓட்டுப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைக்கும் போது முகவர்கள் அதில் கையெழுத்திடவில்லை. இதனால் 25-வது வார்டில் மறுதேர்தல் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இதைத்தொடர்ந்து திருவண்ணாமலை நகராட்சி 25-வது வார்டில் இன்று மறுதேர்தல் நடக்கும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் முருகேஷ் நேற்று மாலை அறிவித்தார். 

அதன்படி திருவண்ணாமலை நகராட்சி  25-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான மறு ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு சண்முகா தொழிற்சாலை மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் தொடங்கியது. 

மாலை 5 மணி வரை வாக்கு பதிவு நடக்கிறது. அதன் பின்னர் 1 மணி நேரம் 6 மணி வரை கொரோனா வாக்காளர்கள் ஓட்டுபோட அனுமதிக்கப்படுகின்றனர். 

இன்று வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று போட்டு போட்டனர். ஓட்டு போட வந்தவர்களுக்கு அவர்களது இடது கை நடுவிரலில் அழியாமை வைக்கப்பட்டது. இன்று மதியம் 12 மணி நிலவரப்படி 46.54 சதவீத வாக்கு பதிவாகியிருந்தது.

இதையொட்டி சாலையின் இருபுறமும் தடுப்புகள் வைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்களை தவிர மற்றவர்கள் அந்த வழியாக செல்ல அனுமதிக்கப்படவில்லை. வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன.

Similar News