உள்ளூர் செய்திகள்
ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவு தொடங்கியது
ஈரோடு மாவட்டத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சியில் 59 வார்டுகளுக்கும், பவானி, சத்தியமங்கலத்தில் தலா 27 வார்டுகள், கோபி நகராட்சியில் 30 வார்டுகள், புஞ்சை புளியம்பட்டி நகராட்சியில் 18 வார்டுகள் என மொத்தம் 4 நகராட்சிகளில் 102 வார்டுகளுக்கும், இதே போல 42 பேரூராட்சிகளில் உள்ள 608 வார்டுகள் என மொத்தம் 769 கவுன்சிலர் பதவிகளுக்கு 2722 பேர் களத்தில் உள்ளனர்.
ஈரோடு மாநகராட்சியில் 434 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. பவானி, கோபி, சத்தியமங்கலம், புளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் 42 பேரூராட்சிகளில் 785 வாக்குச்சாவடிகள் என மாவட்டம் முழுவதும் 95 மண்டலங்களில் 1219 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
நகர்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதற்காக நேற்று வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், தேர்தலில் பயன் படுத்தப்படும் பொருட்கள் கொண்டு வரப்பட்டது.
காலை 6 மணிக்கு மின்னணு வாக்குபதிவு எந்தி ரங்களில் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்குசாவடி ஊழியர்கள் மாதிரி வாக்குபதிவு நடத்தி காண்பித்தனர்.
பின்னர் அதில் பதிவாகி இருந்த வாக்குகள் அழிக்கப்பட்ட பிறகு வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். வாக்குபதிவு தொடங்கியதில் இருந்தே வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.
காலை நேரத்தில் பெண் வாக்காளர்கள் குறைந்த அளவிலேயே வந்திருந்தனர். ஆண் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். 10 மணிக்கு மேல் ஆண் வாக்காளர் களுக்கு இணையாக பெண் வாக்களர்களும் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.
கொரோனா தொற்று பரவல் தடுக்கும் வகையில் வாக்குசாவடி நுழைவு பகுதியில் வாக்காளர்கள் கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்திய பின்னர் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை கண்டறியப்பட்டது.
இதன் பின்னர் வாக்குசாடிக்குள் முககவசம் அணிந்தபடி செல்ல அனுமதிக்கப் பட்டனர். பொதுமக்கள் வாக்களிக்கும் வசதியாக வாக்குச்சாவடி மையங்களில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது.
குறிப்பாக மாற்றுதிறனாளிகள் வாக்களிக்கும் வசதியாக அவர்களுக்கு சாய்வு தளம் அமைக்கப்பட்டு இருந்தது. அவர்களுக்கு 3 சக்கர நாற்காலிகள் வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
இதற்காக தனியாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். கழிவறை, குடிநீர் வசதிகள் செய்யப் பட்டுள்ளன. பொதுமக்கள் வெயிலில் நின்று சிரமப்படக் கூடாது என்பதற்காக சாமியானா பந்தல் போடப்பட்டு இருந்தன.
மாவட்டத்தில் தேர்தலை யொட்டி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தேர்தல் அமைதியான முறையில் நடத்திட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பதட்டமான வாக்கு சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ள 184 வாக்குசாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு 55 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டதோடு, சி.சி.டி.வி கேமிராக்கள் பொருத்தப்பட்டு பதிவு செய்யப்பட்டன. மேலும் வாக்கு பதிவு மையங்களை சுற்றிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு மாநகராட்சியில் உள்ள 59 வார்டுகளில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 816 ஆண் வாக்காளர்களும், 2 லட்சத்து 28 ஆயிரத்து 798 பெண் வாக்காளர்களும், 42 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 4 லட்சத்து 48 ஆயிரத்து 656 வாக்காளர்கள் உள்ளனர்.
பவானி நகராட்சியில் 30 ஆயிரத்து 709 வாக்காளர்கள், கோபி நகராட்சியில் 48 ஆயிரத்து 247 வாக்காளர்கள், சத்திய மங்கலம் நகராட்சியில் 33 ஆயிரத்து 552 வாக்காளர்களும், புஞ்சை புளியம்பட்டி நகராட்சியில் 17,237 வாக்காளர்களும், 42 பேரூராட்சிகளில் 4லட்சத்து 6 ஆயிரத்து 12 வாக்காளர்கள் என மாவட்டம் முழுவதும் 9 லட்சத்து 84 ஆயிரத்து 113 வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர்.