உள்ளூர் செய்திகள்
ஈரோட்டில் அமைதியான முறையில் தேர்தல் நடந்து வருகிறது
ஈரோட்டில் பதட்டமான வாக்குசாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தேர்தல் அமைதியான முறையில் நடந்து வருதாக போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தெரிவித்தார்.
ஈரோடு:
ஈரோட்டில் பதட்டமான வாக்குசாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தேர்தல் அமைதியான முறையில் நடந்து வருதாக போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 769 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. மக்கள் வாக்களிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் 1219 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாவட்டம் முழுவதும் 4 ஆயிரத்து 876 வாக்குப்பதிவு அலுவலர்கள் வாக்குச் சாவடி மையங்களில் பணியாற்றுகின்றனர். காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 184 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வாக்குச் சாவடி மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தாலும் பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இது குறித்து இன்று ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் அமைதியான முறையில் நடந்து வருகிறது. மாவட்டம் முழுவதும் 2500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபோக ஒரு கம்பெனி பட்டாலியன் படையி னரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம். அதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மாவட்டம் முழுவதும் உள்ள பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் கூடுதலாக சப்&இன்ஸ்பெக்டர் தலைமையில் 4 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அங்கு சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத் தப்பட்டு ஒவ்வொரு நடவடிக்கையும் தீவிரமாக போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இதுபோக நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்களும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும் இதுவரை தேர்தல் விதிமுறைகள் மீறியதாக 3 வழக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தல் இது வரை அமைதியாகவே நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.