உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு 628 வாக்குச்சாவடிகள் தயார்

Published On 2022-02-18 15:02 IST   |   Update On 2022-02-18 15:02:00 IST
வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு 628 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளது.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சி குடியாத்தம் பேரணாம்பட்டு நகராட்சிகள் மற்றும் ஒடுக்கத்தூர், திருவலம், பென்னாத்தூர், பள்ளிகொண்டா பேரூராட்சிக்கு நாளை வாக்குப்பதிவு நடக்கிறது.

வேலூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் 2 வார்டுகளில் தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளனர்.

இதனால் 58 வார்டுகளுக்கு தேர்தல் நடக்கிறது. மாநகராட்சியில் மட்டும் 354 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.தேர்தல் பணியில் 1402 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

வேலூர் மாநகராட்சியில் 1,99, 505 ஆண்கள், 2 லட்சத்து 15 ஆயிரத்து 357 பெண்கள் இதர வாக்காளர்கள் 46 பேர் என மொத்தம் 4 லட்சத்து 14 ஆயிரத்து 908 வாக்காளர்கள் உள்ளனர்.

வேலூர் மாநகராட்சியில் 419 வாக்குச் சாவடிகளும் குடியாத்தம் நகராட்சியில் 91, பேர்ணாம்பட்டு நகராட்சியில் 50, ஒடுகத்தூர் பேரூராட்சியில் 15 பள்ளிகொண்டா பேரூராட்சியில் 23, பென்னாத்தூர் பேரூராட்சியில் 15, திருவலம் பேரூராட்சியில் 15 என மொத்தம் 628 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் செய்யப் பட்டுள்ளன. மேலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

இதில் வேலூர் மாநகராட்சியில் 67 வாக்குச் சாவடிகள் உள்பட மொத்தம் 87 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா வசதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இந்த வாக்குச்சாவடிகளை நேரடியாக கண்காணிப்பார்கள். இது தவிர கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

வாக்குச்சாவடிகளில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்கு அரசியல் கட்சியினர் ஓட்டு சேகரிக்க, கூட்டமாக வர தடை செய்யப்பட்டுள்ளது.

இதற்காக வாக்குச்சாவடிகளில் அருகே 100 மீட்டர் தொலைவில் வெள்ளை நிற கோடு வரையப்பட்டுள்ளது. தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தீவிர மாக தேர்தல் பணிகளை கண்காணித்து வருகின்றனர்.

Similar News