உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

பள்ளிகொண்டா அருகே 5 ஏக்கர் கரும்பு தோட்டம் தீவைத்து எரிப்பு தேர்தல் விரோதம் காரணமா? விசாரணை

Published On 2022-02-18 14:56 IST   |   Update On 2022-02-18 14:56:00 IST
பள்ளிகொண்டா அருகே 5 ஏக்கர் கரும்பு தோட்டம் தீவைத்து எரிக்கப்பட்டதற்கு தேர்தல் விரோதம் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
அணைக்கட்டு:

பள்ளிகொண்டா அருகே உள்ள கீழாத்தூர் கிராமத்தில் விவசாயிகள் பலர் கரும்பு பயிரிட்டுள்ளனர்.இன்று காலை பள்ளி கொண்டா பேரூராட்சி பகுதியை சேர்ந்த விவசாயிகள் 5 பேருக்கு சொந்தமான கரும்புத் தோட்டத்தில் மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

வேகமாக பரவிய தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதில் 5 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்புகள் அனைத்தும் எரிந்து நாசமானது.

இதே போல அதே பகுதியில் உள்ள 10 விவசாய மின் மோட்டார்கள் ஒயர்கள் இணைப்பு மர்ம நபர்களால் துண்டிக்கப்பட்டுள்ளது.

கரும்பு பயிர்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதை கண்டு விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மின் மோட்டார் ஒயர்கள் துண்டிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

எரிக்கப்பட்ட கரும்பு தோட்டத்தின் உரிமையாளர்கள் 5 பேர் பள்ளிகொண்டா பேரூராட்சி தேர்தலில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

எனவே தேர்தல் விரோதம் காரணமாக கரும்பு தோட்டத்திற்கு தீ வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Similar News