உள்ளூர் செய்திகள்
அத்தாணி, அம்மாபேட்டை பேரூராட்சியில் 2 வார்டுகளில் தேர்தல் ஒத்திவைப்பு
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்கள் மரணம் அடைந்ததால் அத்தாணி, அம்மாபேட்டை பேரூராட்சியில் 2 வார்டுகளில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
ஈரோடு:
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்கள் மரணம் அடைந்ததால் அத்தாணி, அம்மாபேட்டை பேரூராட்சியில் 2 வார்டுகளில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் அத்தாணி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 3-வது வார்டில் தி.மு.க. சார்பில் அய்யப்பன் (51) என்பவர் போட்டியிட்டார். அவர் அந்த பகுதி தி.மு.க. செய லாளராகவும் இருந்தார்.
தி.மு.க. வேட்பாளர் அய்யப்பன் பிரசாரம் முடிந்து வீட்டுக்கு வந்தார். அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து தி.மு.க. வேட்பாளர் அய்யப்பன் திடீரென இறந்ததால் அத்தாணி பேரூராட்சி 3-வது வார்டு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த வார்டுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதே போல் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன.
இதில் தி.மு.க. 13 இடங்களிலும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 2 வார்டுகளிலும் போட்டியிடுகிறது.
அம்மாபேட்டை பேரூராட்சி 2-வது வார்டு தி.மு.க. வேட்பாளராக ஊமாரெட்டியூர் சுந்தராம் பாளையத்தை சேர்ந்த அழகேசன் (என்கிற) சித்து ரெட்டி (62) போட்டியிட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அழகேசன் பிரசாரத்தை முடித்து கொண்டு இரவு வீட்டுக்கு வந்தார்.
நேற்று அதிகாலை அழகேசனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
அம்மாபேட்டை பேரூராட்சி 2-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் அழகேசன் இறந்ததால் அந்த வார்டில் தேர்தல் ரத்து செய்யப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டது.