உள்ளூர் செய்திகள்
வாக்குச்சாவடி மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

வாக்குசாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு

Published On 2022-02-18 14:36 IST   |   Update On 2022-02-18 14:36:00 IST
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குசாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
ஈரோடு:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குசாவடி மையங்களுக்கு மின்னணு  வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி  தேர்தல் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. 

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சிக்கு 60 வார்டுகள், பவானி, சத்திய மங்கலம் நகராட்சியில் 27 வார்டுகள், கோபி நகராட்சி 30 வார்டுகள், புஞ்சை புளியம்பட்டி நகராட்சியில் 18 வார்டுகள் என மொத்தம் 4 நகராட்சிகளில் 102 வார்டுகளுக்கும், இதே போல 42 பேரூராட்சிகளில் உள்ள 630 வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் ஈரோடு மாநகராட்சியில் மொத்த முள்ள 60 வார்டுகளில் 51&வது வார்டில் தி.மு.க வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றதையடுத்து மீதமுள்ள 59 வார்டுகளில் தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், பா.ஜனதா, ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர், த.மா.கா, எஸ்.டி.பி.ஐ, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தே.மு.தி.க, கொ.ம.தே.க உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 352 பேர் போட்டியில் உள்ளனர்.

பவானி, கோபி, சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகளில் 453 பேர் போட்டியிட்டுள்ளனர். 42 பேரூராட்சிகளில் மொத்த முள்ள 630 வார்டுகளில் 20 வார்டுகளில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதையடுத்து 610 வார்டுகளில் 1,919 பேர் போட்டியில் இருந்தனர்.

இதில் அத்தாணி, அம்மாபேட்டை பேரூரா ட்சிகளில் வேட்பாளர்கள் இறந்ததையடுத்து அந்த 2 வார்டுகளுக்கும் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து 608 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இதன்படி ஈரோடு மாவட்டத்தில் 769 பதவிகளுக்கு 2724 பேர் போட்டியிட்டுள்ளனர். கடந்த 10 நாட்களாக தீவிர வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது. 

இதை தொடர்ந்து தேர்தல் நடைபெறும் பகுதியில் வெளியூர் ஆட்கள் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஈரோடு மாவட்ட போலீசார் லாட்ஜுகளில் வெளியூர் நபர்கள் தங்கி உள்ளார்களா? என்பது குறித்தும் சோதனை செய்தனர். மேலும் மாலை 6 மணிக்கு மேல் யாரேனும் பிரசாரம் மேற் கொள்கிறார்களா? என்பது குறித்தும் அதிகாரிகள் கண்காணித்தனர். 

நாளை காலை 7 மணிக்கு உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவு- தொடங்கி மாலை 6 மணிக்கு நிறை வடைய உள்ளது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு வாக்களிக்க நேரம் ஒதுக்கப் பட்டுள்ளது. 

இதையடுத்து ஈரோடு மாநகராட்சியில் 434 வாக்குசாவடிகள் அமைக்கப் பட்டுள்ளது. பவானி, கோபி, சத்தி, புளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் 42 பேரூராட்சிகளில் 787 வாக்குசாவடிகள் என மாவட்டம் முழுவதும் 95 மண்டலங்களில் 1,221 வாக்குசாவடிகள் அமைக் கப்பட்டு தயார்நிலையில் உள்ளது.

இன்று காலை வாக்குசாவ டிகளுக்கு தேவையான மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள், வாக்குபதிவின் போது தேவைப்படும் பொருட்கள், கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவை அந்தந்த மண்டல தேர்தல் அலுவலர்கள், உதவி அலுவலர்கள் மூலம் ஒவ்வொரு வாக்குசாவடி மையங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் எடுத்து செல்லப்பட்டது.  

மாவட்டத்தில் தேர்தலையொட்டி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் ஊர்காவல் படையினரும், முன்னாள் ராணுவத்தினரும் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர்.  

மாவட்டத்தில் பதட்டமான வாக்குசாவடிகள் என கண்டறியப்பட்டுள்ள 184 வாக்குசாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

அதேபோல் மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்கும் வகையில் அவர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்யப் பட்டுள்ளன. அவர்கள் வாக்கு சாவடிக்கு செல்ல சாய்வு தளம், 3 சக்கர வாகனங்கள், அவர்களுக்கு உதவுவதற்கு என்று  தனியாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். 

நாளை ஓட்டுப்பதிவு என்பதால் மாவட்டம் முழுவதும் பறக்கும்படையினர் விடிய, விடிய வாகன சோதனை நடத்தினர். 

மேலும் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறதா? என்றும் தீவிரமாக கண்காணித்தனர்.  தொடர்ந்து இன்று காலை முதல் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Similar News