உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

ஓட்டு எண்ணும் மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

Published On 2022-02-17 15:05 IST   |   Update On 2022-02-17 15:05:00 IST
ஈரோடு மாவட்டத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை சுற்றியுள்ள பகுதியில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்படும். இந்தப் பணியில் சுழற்சி முறையில் 120 போலீசார் ஈடுபடுகிறார்கள்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை சுற்றியுள்ள பகுதியில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்படும். இந்தப் பணியில் சுழற்சி முறையில் 120 போலீசார் ஈடுபடுகிறார்கள். 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ந் தேதி நடைபெற உள்ளது. 22-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. 

ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி, 4 நகராட்சிகள் மற்றும் 42 பேரூராட்சிகளில் அமைக்கப்பட உள்ள வாக்குசாவடி மையங்களில் பதிவாகும் வாக்குகள்  14 மையங்களில் எண்ணப்பட உள்ளது. 

இதன்படி ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள 59 வார்டுகளில் பதிவாகும் வாக்குபதிவு எந்திரங்கள் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியிலும், பவானி நகராட்சியில் பதிவாகும் வாக்கு பதிவு எந்திரங்கள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், கோபி நகராட்சியில் பதிவாகும் வாக்குகள் கோபி வைரவிழா மேல்நிலைப்பள்ளியிலும், சத்தியமங்கலம் நகராட் சியில் பதிவாகும் வாக்குகள் காமதேனு கல்லூரி, புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் பதிவாகும் வாக்குகள் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும் வைத்து எண்ணப்பட உள்ளது. 

இது தவிர 42 பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகள் 9 இடங்களில் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 14 மையங்களில் வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 

பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்ததும் வாக்குச்சாவடி தலைமை அதிகாரிகள் வாக்குப்பதிவு எந்திரங்களை பூட்டி சீலிட்டு, போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பிவைப்பார்கள். 

அங்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அடங்கிய பெட்டியை சோதனையிட்டு அங்குள்ள பாதுகாப்பு அறையில் (ஸ்ட்ராங் ரூம்) வாக்குச்சாவடி வாரியாக அடுக்கி வைப்பார்கள். 

வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வந்தவுடன் வாக்கு எண்ணிக்கை மையம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். 

பின்னர் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை அதை சுற்றியுள்ள பகுதியில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்படும். இந்தப் பணியில் சுழற்சி முறையில் 120 போலீசார் ஈடுபடுகிறார்கள். 

வாக்கு எண்ணிக்கை நாளான வரும் 22-ந் தேதி வரை இந்த பணி தொடரும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News